சென்னை:

மீபத்தில் மரணம் அடைந்த நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நடிகர் கிரேஸி மோகன் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள்  பரவி வரும் நிலையில், கிரேஸி மோகன் இயற்கையான முறையிலேயே திடீரென மரணம் அடைந்தார், தயவு செய்து அவரது மரணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது சகோதரரும், நாடக நடிகருமான மாது பாலாஜி வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்ட அவர்,  கடந்த 10ம் தேதி மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார்.  அதன்பின் சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிரேஸிமோகன் மரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மாது பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  கிரேஸி மோகன் வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ சாகவில்லை. அவர் திடீரென மரணத்தை தழுவி உள்ளார். 10ந்தேதி காலைல சுமார்  ஏழரை மணி அளவில் தான் மோகனை சந்தித்து பேசியதாக வும், அப்போது வாக்கிங் போய்விட்டு வந்து என்னிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்… அவருக்கு சுகரோ, பிபி உள்பட எந்தவித நோயும் கிடையாது.

பொதுவாக காலை 9.15 மணிக்கு அவர் காலை உணவு அருந்தும் நேரம்.. அன்றைய தினம் 9.45 மணிக்கு எனக்கு போன் செய்தார். கொஞ்சம் மூச்சுமுட்டுவதாக கூறினார். கேஸ் பிரச்சினையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்… உடனடியாக அவர் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நானும் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது உயிர் மதியம் 2 மணி அளவில் பிரிந்தது.

ஆனால், அவரது மறைவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை என்று மறுத்த பாலாஜி, அவருக்கு எந்த நோயும் கிடையாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்… நம்மளை சோகத்தில் ஆழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்… அவரது மறைவு இயற்கையான மரணமே….

இவ்வாறு மாது பாலாஜி வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.