புற்று நோயை உருவாக்கும் பொட்டாசியம் புரோமேட்  என்ற நச்சு இராசயனத்தை  உணவுப்பொருட்களில் சேர்க்க  மத்திய அரசு தடை விதிக்க இருக்கும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருளை ரொட்டியில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்துவதாக ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
5
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் முன்னணி நிறுவன ரொட்டிகள், பன் ஆகியவற்றின் 38 மாதிரிகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அண்மையில் ஆய்வு செய்தது.  அதில், மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் பொட்டாசியம் புரோமேட், தைராய்டு பிரச்சினையை உண்டாக்கும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவது  கண்டறியப்பட்டது.  இந்த ரசாயன பொருட்களுக்கு தடை விதிக்குமாறு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்துக்கு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பரிந்துரை செய்தது.
அதை ஏற்றுக்கொண்ட இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், பொட்டாசியம் புரோமேட் ரசாயன பொருளுக்கு தடை விதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அரசு தடை விதிக்க இருக்கிறது. இந்த நிலையில், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.