சென்னை:

பள்ளி, கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘ திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கும் வகையில் 45 நாட்கள் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லூரி, பல்லைக்கழக விளையாட்டு மைதானங்களை தமிழக அரசு பயன்படுத்தக் கூடாது. எந்த ஒரு கல்வி நிறுவனமும் அதற்குரிய வகையில் செயல்பட அரசின் குறுக்கீடு இருக்க கூடாது.

கல்வி நிறுவன வளாகங்களில் கல்வி சூழல் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறக்கூடாது. அரசு தனது சாதனைகளை விளக்க கண்காட்சி நடத்துவது அல்லது வேறு எந்த நிகழ்ச்சி நடத்துவது என்றாலும் கல்வி நிறுவனங்களை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ள வேண்டும். ’’ என்றார்.

மேலும், நீதிபதி கூறுகையில், ‘‘திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று இடம் பார்க்க போதுமான அவகாசம் இல்லாததால் அரசு அங்கு கண்காட்சி நடத்திக் கொள்ளலாம்.

கண்காட்சி அமைக்க பந்தல் அமைக்கும் பணி நவம்பர் 23ம் தேதி தொடங்கியது. தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. இந்த முன் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டிருந்தால் முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும்.

மாலை 5 மணி முதலே கண்காட்சி தொடங்க வேண்டும். அதற்கு முன்பு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்காட்சி முடிந்த பிறகு மைதானத்தை மீண்டும் சீர் செய்து கொடுக்க வேண்டும். இதற்காக மரங்கள் ஏதுவும் வெட்டப்பட்டிருந்தால் அதற்கு பதிலாக 25 மரங்கள் புதிதாக அங்கு நட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.