விளம்பரத்திற்காக அமைக்கப்பட்டு காஷ்மீர் வந்துள்ள குழு : இணைய விரும்பாத இங்கிலாந்து எம்  பி

ண்டன்

விளம்பரத்துக்காகக் காஷ்மீருக்கு அழைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவில் இடம் பெற விரும்பவில்லை என இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிரீஸ் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றைக் காஷ்மீர் செல்ல இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தக் குழுவில் இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,, செக் குடியரசு, போலந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.   இது காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படும் முதல் குழு ஆகும்.

இந்த குழுவின் வருகைக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பல காஷ்மீர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்த குழுவினர் முன்னாள் முதல்வர்கள், பொது மக்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் எனவும் அதன் மூலம் காஷ்மீருக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் உள்ள இரும்புத் திரை விலக வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்தக் குழுவில் அழைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் குழுவில் தற்போது இடம் பெறவில்லை.   இந்த குழுவில் இடம்  பெற அவரே மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இது குறித்து கிரிஸ் டேவிஸ். “நான் முதலில் இந்த அழைப்பை மறுக்கவில்லை.  காஷ்மீர் மாநிலத்தில் நான் சுதந்திரமாகச் சென்று ராணுவத்தினர், காவல்துறை, பாதுகாப்புப் படைகள் இல்லாமல் மக்களை சந்திக்க விரும்பினேன்.

நான் விளம்பரத்துக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒருவனாக செல்ல விரும்பவில்லை.  ஆனால் இந்திய அரசு எனது கோரிக்கையை மறுத்து விட்டது.  எனது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிடில் நான் காஷ்மீர் வர மாட்டேன் எனக் கூறினேன்.   அதன் பிறகு இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்திய அரசு மறைக்கும் அளவுக்குக் காஷ்மீரில் என்ன உள்ளது?   பத்திரிகையாளர்களையும் அரசியல்வாதிகளையும் உள்ளூர் மக்களைச் சந்திக்க ஏன் அனுமதிப்பதில்லை?” என வினாக்கள் எழுப்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி