மும்பை: வருமான வரி செலுத்துபவர்கள் பணத்தை விரயம் பண்ணக்கூடாது என்று அதிகாரிகளிடம் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. அவருக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி இருக்கிறார். தலைமைச் செயலகம் வந்த அவர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அவர்கள் மத்தியில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசினார். பின்னர் இது குறித்து தாக்கரே கூறி இருப்பதாவது: மாநில தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக வந்திருக்கிறேன்.

தலைமை செயலக அதிகாரிகளுடன் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். வருமான வரி கட்டுபவர்களின் பணம் சிறந்த வழியில் செலவிடப்பட வேண்டும். எந்த காரணம் கொண்டும் வீணடிக்கக்கூடாது.

ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த திட்டம் கைவிடப்படாது.  ஆரே காலனியில் ஒரு மரத்தின் இலை கூட வெட்ட அனுமதிக்க முடியாது என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆரே காலனியில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக மரங்கள் இருக்கின்றன. அங்கு மும்பை மெட்ரோ ரயில் நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் 2,700 மரங்கள் வெட்டப்படுகிறது. அதற்காக மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.