சென்னை

சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இன்று ஒரே நாளில் 2141 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   மொத்தம் 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அகில இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் சென்னையில் இன்று 1373 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 37,070 ஆகி உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளது.

இதையொட்டி நாளை முதல் இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இம்முறை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சி இன்று முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பரிசோதனையின் போது அறிகுறிகள் தென்படும் மக்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா மானிடரிங் செயலியில் பதிவேற்றப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.