டில்லி

ரும் 21 ஆம் தேதி அன்று சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் அன்று செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விவரம் இதோ

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் முழு சூரிய கிரகணம் தெரிவது அபூர்வமாகி வருகிறது.  இதற்கு முன்பு 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி மற்றும் 2016 ஆம் வருடம் டிசம்பர் 26ஆம் தேதி ஆகிய நாட்களில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.  மிகச் சமீபத்தில் கடந்த வருடம் டிசம்பர் 26 கிரகணம் தெரிந்தது   இந்த வருடம் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 14 சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.

தற்போது நடைபெற உள்ள சூரிய கிரகணம் இந்திய நேரப்படி ஜூன் 21 காலை 9.15 மணி முதல் மாலை 3.04 மணி வரை இருக்கும்.  இந்த கிரகணம், இந்தியா, ஆப்ரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்  தெரியும்   அந்தந்த நாடுகளில் அப்போதுள்ள வானிலை மேக மூட்டமின்றி இருந்தால் இங்குள்ள மக்களால் இந்த கிரகணத்தைக் காண முடியும்.

சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இணையும் போது நடக்கும்.  இது அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.  இதனால் நிலா சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் வரும் போது சூரியனை மறைத்து பிறகு வெளி வரும்.  இந்த கிரகணத்தின் உச்சத்தின் போது முழு சூரியனும் மறையும் போது ஒரு வைர மோதிரம் போன்ற காட்சி தெரியும்.

அதாவது சூரிய ஒளி இருட்டான நிலவின் சுற்றுப் புறத்தில் தெரியும் போது மற்றும் சிறிது சிறிதாக வெளி வரும்போது இந்த இந்த காட்சி தெரியும்.  சூரியனை விட அளவில் மிகவும் சிறியதான சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்தாலும் முழுமையாகச் சூரியனை மறைக்க முடியாது என்பதால் இந்த மோதிர ஒளி தெரிகிறது.

சூரிய கிரகணத்தை பொறுத்த வரை இந்தியாவில் பல நம்பிக்கைகள் உள்ளன  இவை அனைத்தும் பொதுவாக ஆயுர்வேத அடிப்படையில் உருவானவை ஆகும்.   கிரகணத்தின் போது சூரியன் முழுமையாகத் தெரியாது என்பதால் இது கெட்ட நேரம் எனக் கூறப்படுகிறது,  மேலும் பாக்டீரியாக்களும் கிருமிகளும் இந்த நேரத்தில் அதிக வளர்ச்சி அடையும் எனவும் நம்பப்படுகிறது  இதனால் பல வீடுகளில் கிரகணத்தின் போது சமைப்பது, உண்பது நீர் பருகுவது, வெளியே செல்வது ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர்.

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் இது குறித்து “சமைக்கப்பட்ட உணவில் கிரகணத்துக்கு முன்பும் பின்பும் அதிக அளவில் மாறுதல் ஏற்படும்.  இதனால்  சமைத்த உணவு விரைவில் கெட்டுப்போய் விஷத்தன்மை அடைய நேரிடும்.  மற்ற நாட்களை விட கிரகண காலத்தில் உணவு மிக விரைவில் கெட்டுப் போகும்” எனத் தெரிவிக்கிறார்.

பிர்லா ஆயுர்வேத மருத்துவ நிலைய தலைமை மருத்துவர் பிரியங்கா சம்பத், ”சூரிய கிரகண காலத்தில் காந்த சக்தி மற்றும் யுவி கதிர்கள் வீச்சு அதிகமாக இருக்கும்,  இதனால் உடலில் பல பாதிப்புக்கள் உண்டாகும்.   நமது ஜீரண உறுப்புக்கள் சரிவர இயங்காது.  ஆகையால் இந்த நேரத்தில் உணவு உண்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   நவீன விஞ்ஞானம் இதை ஒப்புக் கொள்வதில்லை.

ஆயுர்வேத முறைப்படி மக்கள் உணவு உண்பதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டாலும் அதில் முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   அவர்கள் லேசான மற்றும் எளிதில் செரிக்கும் உணவு வகைகளைச் சாப்பிடலாம்.  குறிப்பாக அரிசி நொய்க் கஞ்சி அல்லது பயித்தம் கஞ்சி நல்ல உணவாகும்,  கருவில் இருக்கும் குழந்தைக்கு யுவி கதிர் வீச்சால் அபாயம் நேரிடலாம் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.

தண்ணீர் குடிப்பதையும் இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.  மிகவும் தேவைப்பட்டால் கொதிக்க வைத்து ஆறிய வெதுவெதுப்பான நீரைப் பருகலாம்.  ஆயுர்வேத முறைப்படி நீரை எட்டில் ஒரு பங்காகக் குறையும் அளவுக்குக் கொதிக்க வைக்க வேண்டும்.   அப்போது அது மிக எளிதாகச் செரிக்கும்.   உடல் நலமற்றோர் லேசான மற்றும் எளிதில் செரிக்கக் கூடிய சைவ உணவுகளைச் சாப்பிடலாம்   உணவில் அதிகம் மஞ்சள் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு நிபுணர்கள், ”சூரிய கிரகணத்தின் போது நேரடியாகச் சூரியனைப் பார்க்கக் கூடாது.  இப்படிப் பார்ப்பதால் பார்வைத் திறன் நிரந்தரமாகப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.  அந்த நேரத்தில் சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்கள் கண்களில் எரிச்சல் மூட்டுவதுடன் பார்வை நரம்புகளை வெகுவாக பாதிக்கும் என்பதால் இவ்வாறு எச்சரிக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தை காணச் சிறப்புக் கண்ணாடிகள் உள்ளன.  அவை சாதாரண குளிர் கண்ணாடிகளைப் போல் பன்மடங்கு கருமையானவை ஆகும்  அவற்றின் மூலம் கிரகணத்தை ஒரு சில நொடிகள் மட்டும் பார்க்கலாம்,   அதை விடச் சூரியனை நேரடியாகப் பார்க்காமல் அதன் பிரதிபலிக்கும் நிழலைப் பார்க்கலாம்.  அதைப் போல் பைனாகுலர் போன்றவற்றால் நேரடியாகச் சூரியனைப் பார்க்கக் கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சூரிய கிரகணத்தின் போது தியானம் மற்றும் மந்திரங்களை ஜபிப்பது நல்லது எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ”மனித இதயம் சந்திரனுடன் தொடர்புடையது,  உடல் பூமியுடன் தொடர்புடையது,  இந்த இரண்டும் சூரியனுடன் தொடர்புடையது.  இந்த மூன்றும் ஒரே கோட்டில் வரும்போது அது ஆன்மீக செய்கைகளுக்கு மிகவும் உகந்தது.   இந்த நேரத்தில் மந்திரங்களை 108 முறை ஜபிப்பது 10000க்கும் மேற்பட்ட முறை ஜபிப்பதற்கு சமமாகும்.” என கூறி உள்ளார்.