டில்லி

பி எஸ் என் எல் தனது முதலீட்டு செலவு மற்றும் டெண்டர்களை நிறுத்தி வைக்க மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த 2014-15 ஆம் வருடம் ரூ.672 கோடி, 2015-16 ஆம் வருடம் ரூ.3885 கோடி, மற்றும் 2016-17 ஆம் வருடம் ரூ.1684 கோடி என லாபம் ஈட்டி வந்தது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நுழைவுக்கு பிறகு மற்ற தொலை தொடர்பு நிறுவனம் போல பி எஸ் என் எல் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது.

தற்போதைய நிலையில் ஜியோ உட்பட அனைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் 4 ஜி சேவையை அளித்து வருகின்றன. ஆனால் அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் இன்னும் 4 ஜி க்கு மாறவில்லை. இதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு நிதி உதவி வழங்காததே இதற்கு காரணமாகும்.

தற்போது நாடெங்கும் உள்ள ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் இந்த வசதியை வழங்க முடிந்த பி எஸ் என் எல் உட்கட்டமைப்பு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீட்டு செய்யப்படாததால் மிகவும் பின் தங்கி உள்ளது. அது மட்டுமின்றி தற்போதுள்ள போட்டி நிறைந்த தொலை தொடர்பு சந்தையில் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல் கட்டணத்தை குறைக்க முடியாத நிலையில் பி எஸ் என் எல் உள்ளது.

மிகவும் வருமானம் குறைந்த நிலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலை தொடர்பு துறை ஒரு சுற்றரிக்கையை அனுப்பி உள்ளது. அதன்படி வரும் ஜூன் 2 க்கு பிறகு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள அனைத்து முதலிட்டு செலவுகளையும் மற்றும் அனைத்து டெண்டர்களையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது..

பி எஸ் என் எல் நிறுவனம் தற்போது மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.   இதனால் 4 ஜி மற்றும் 5 ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள பி எஸ் என் எல் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.