டில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர்

டில்லி,

ரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சுகேஷ் சந்தர் என்ற தகவர் யார் என்பது குறித்து தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று காலை சொகுசு விடுதி ஒன்றில்  டில்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்தர்  என்பவர்  கைது செய்யப்பட்டடார். அவரிடம் இருந்து  ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை  தங்களது அணிக்கு ஒதுக்க ஆவன செய்யக்கோரி,  தினகரன்தான் தனக்கு பணம் கொடுத்து தேர்தல் ஆணையத்தில் வழங்க கூறியதாக சுகேஷ் சந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுகுறித்த விசாரணை  நடத்த டில்லி போலீசார் நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுகேஷ் சந்திராவின் வாக்குமூலம்  இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  தொழிலதிபர், தரகர் என பலவாறாக அறியப்பட்டுள்ள சுகேஷ்சந்திரா என்பவர் மீது  50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சுகேஷ் சந்தர் மீது சிறுவயது முதலே பல்வேறு குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன.

2010ம் ஆண்டு சென்னையில் இரண்டு பேரிடம் 5 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 2015ம் ஆண்டு மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா மற்றும் அவரது காதலர் சுகேஷ் சந்தர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 அரசுக்கு சொந்தமான கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி தமிழ் நகைச்சுவை நடிகர் ஒருவரிடம் 5 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் வழக்கு உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் 12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்தர் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

இது மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பெங்களூருவில் சுகேஷ் சந்தர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.