இரட்டை இலை லஞ்ச வழக்கு: குற்றப்பத்திரிகையை எதிர்த்து டிடிவி நண்பர் வழக்கு

டில்லி:

ரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனே வழக்கு பதிவு செய்துள்ளார்.

இரட்டை இலையை  தங்களது அணிக்கு ஒதுக்க வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் மற்றும் அவரது மல்லிர்காஜுனே, குமார் மற்றும் தரகர் சுகேஷ் சந்திரா உள்பட பலர் மீது டில்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், டில்லி காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் இன்று டிடிவி தினகரன் கையெழுத்திட்ட நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாக கூறி, டிடிவியின் நண்பர் மல்லிகார்ஜுனே மற்றும் பி.குமார் ஆகியோர் பாட்டியாலா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறான சித்தரிப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற டிடிவி  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தரகர் சுகேஷ் சந்திர சேகரின் கூட்டாளி புல்கித் குந்த்ரா ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து டிடிவியின்  நண்பர் மல்லிகார்ஜுனா, குமார்  மற்றும் ஹவாலா புரோக்கர் களும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து முதல் கட்டமாக  ரூ.50 லட்சம் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் கூறி இருந்தனர் பின்னர்  ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

விசாரணையில், இரட்டை இலையை டிடிவி தினகரனின் அதிமுக அம்மா அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசியதாக தெரியவந்தது. இதில் முதல் கட்டமாக ரூ.10 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. அந்த 10 கோடி ரூபாய் பணத்தை   சென்னை யிலிருந்து கொச்சி வழியாக டில்லிக்கு ஹவாலா தரகர் மூலம் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்து வந்த டில்லி போலீசார் டிடிவி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த குற்றப்பத்திரிகையில்  உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாக கூறி, டிடிவியின் நண்பர் மல்லிகார்ஜுனே மற்றும் பி.குமார் ஆகியோர் பாட்டியாலா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.