பி.சி.சி.ஐ யின் இரட்டை வேடம் “சீன விளம்பரதாரரை நீக்க முடியாது” – ட்ரெண்ட் ஆகும் #BoycottIPL

புதுடெல்லி :

கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலையையும் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு இடம்பெயர்வதை திசைதிருப்பும் விதமாகவும் இந்த குழப்பமான தருணத்தை பயன்படுத்தி சீனா நமது எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவியது, இதனை அடுத்து நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு யோசித்துவருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக சீனாவின் 59 செயலிகளை நீக்கியதன் மூலம், மக்கள் அனைவரும் சீனாவிற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கவிருந்த இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை கொரோனா வைரஸை காரணம் கூறி ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

ஐ பி எல் போட்டிகளுக்கு பிரதான விளம்பரதாரராக இருக்கும் சீன மொபைல் போன் கம்பெனியான விவோ இந்த போட்டியில் நீக்கப்படும் என்று நினைத்திருந்த நேரத்தில், ஐ பி எல் நிர்வாக குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை இந்த போட்டி ஐக்கிய அரபு நாடுகளில் நடப்பதால் விவோவுடனான தனது விளம்பர ஒப்பந்தத்தை தொடர்வது என முடிவு செய்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது, சமூக வலைத்தளங்களில் ஐ.பி.எல் லை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்-டேக் கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அதன் 59 செயலிகளை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து நீக்கிய இந்திய அரசு, அமித் ஷா வின் மகன் ஜெய் ஷா வை செயலாளராக கொண்டு செயல்படும் பி.சி.சி.ஐ யின் இந்த முடிவில் தலையிடுமா என்பது கேள்விக்குறியே.