தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : ஒரு அலசல்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.   காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகள் வீசியும் கூட்டம் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சூட்டில் சுமார் 11 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இது குறித்து பத்திரிகையாளர்கள் பல வினாக்களை எழுப்பி உள்ளனர்.

“ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.   இப்போது அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் குறைந்தது 50 ஆயிரம் பேராவது கலந்துக் கொள்வார்கள் என உயர் அதிகாரிகள் ஏன் கணிக்கவில்லை?  பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்த டிஜிபி ராஜேந்திரன் ஏன் நேரில் செல்லவில்லை?  அல்லது மற்ற அதிகாரிகளையும் ஏன் அனுப்பவில்லை?   பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த பேரணியை காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்?

மாநில அமைச்சர்கள், முதல்வர் அல்லது துணை முதல்வர் வந்தாலே ஐஜி போன்ற அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது வழக்கம்.    அப்படி இருக்க இந்த ஊர்வலத்துக்கு மொழி கூட தெரியாத வடமாநில காவல்துறை அதிகாரியைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்?  காவல்துறையினர் துப்பாக்கி சூட்டின் போது வழக்கமாக உபயோகப்படுத்தும் 303 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தாதது ஏன்?

வழக்கமாக உபயோகப்படுத்தும் 303 ரக துப்பாக்கியில்  ஒவ்வொரு குண்டாக போட்டு சுட வேண்டும்.   தற்போது எஸ் எல் ஆர் ரக துப்பாக்கியை உபயோகப் படுத்தியதற்கான காரணம் என்ன?  ஆனால் இந்த துப்பாகியால் 20 குண்டுகளை ஒரே நேரத்தில் சுடலாம்.   அத்துடன் இந்த துப்பாக்கியால் 500 மீட்டரில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை சரியாக குறிபார்த்து சுட முடியும்.    அவ்வாறு குறி பார்த்து சுட வேண்டிய துப்பாக்கியைக் கொண்டு பெண்கள் மற்றும் வயதானவர்களை காவல்துறையினர் சுட்டது ஏன்?

துப்பாக்கி சூடு நிகழ்ந்த போது அந்த இடத்தில் எந்த ஒரு உயர் அதிகாரியும் கிடையாது.   யாருடைய உத்தரவின் பெயரில் காவல்துறையினர் சூடு நடத்தினார்கள்?   சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை சூப்பிரண்டுகள் மகேந்திரன், அருண் சக்திகுமார், மற்றும் டிஐஜி கபில்குமார் ஆகியோர் இதுவரை துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்பதை கூறவில்லை.   இதனால் இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதா?”

இவ்வாறு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.