க்னோ

கிரிமினல்களை ஒடுக்க பாஜகவின் உ. பி. யோகி ஆதித்யநாத் அரசால் நடத்தப்படும் என்கவுண்டர் குற்றப்பத்திரிகைகளில் ஒரே வார்த்தையை உபயோகப்படுதப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம்  உத்திரப் பிரதேசத்தின் பாஜக அரசு பல கிரிமினல்களை பிடிக்கும் செயலில் ஈடுபடத் துவங்கியது.    யோகியின் இந்த பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1142 என்கவுண்டர்கள் நிகழ்ந்துள்ளது.    இது கிரிமினல்களை ஒழிக்க காவல்துறை செய்யும் சுலபமான வழி என பலரும்  கூறுகின்றனர்.   இந்த என்கவுண்டர்களில் சுமார் 34 பேருக்கு உடலில் 265க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் தெரிந்துள்ளது.

இது குறித்து என் கவுண்டரில் மரணம் அடைந்த குற்றவாளிகளின் உறவினர் மட்டும் இன்றி பல சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் சந்தேகங்கள் எழுப்பி உள்ளனர்.   அவர்கள் அனைவரும் இவை போலி என்கவுண்டர்களாக இருக்கலாம் என ஐயத்தை தெரிவித்துள்ளனர்.   மேலே குறிப்பிட்டுள்ள 34 பேர் விவகாரத்தில் அனைத்து குற்றப் பத்திரிகைகளும் ஒரே மாதிரியாக ஒரே வார்த்தைகளால் அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகைகளில் பொதுவாக காணப்படும் வாசகங்கள், “குற்றவாளி தனது கூட்டாளியுடன் கார் அல்லது பைக் போன்ற வாகனத்தில் தப்பிச் சென்றார்.    காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றனர்.   ஆனால் அவர்கள்  காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தினர்.   தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காவல்துறையினர் பதிலுக்கு சுட்டதில் குற்றவாளி மரணம் அடைந்தார்”  என்பதே ஆகும்.

இது போல எழுதப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைககளில் 10 க்கு 9 வழக்குகளில் கூட்டாளி என சொல்லப்படுபவர் கண்டுபிடிக்கப் படுவதில்லை.    சில இடங்களில் அவர் என்ன ஆனார் என்பதும் சொல்லப்படுவதில்லை.    அதே போல பல நேரங்களில் தப்பிச் சென்றதாக சொல்லப்பட்ட குற்றவாளிகள் அவர்களின் உறவினர் முன்பு பிடித்துச் செல்லப்பட்டவர்களாகவே உள்ளனர்.

மேலும் குற்றவாளிகளை இவ்வாறு பிடித்துச் செல்லும் காவல்துறையினர் சீருடையில் வருவதில்லை.    அத்துடன் பிடித்துச் சென்ற குற்றவாளிகள் பிடிக்கச் சென்ற போதே தப்பித்து விட்டதாகவும் அப்போது என்கவுண்டர் நடைபெற்றதாகவும் காவல்துறையினரால் பதியப்படுகின்றன.   ஆனால் ஒருமுறை கூட அதை உடன் இருந்த உறவினர்கள் பார்த்ததாகவோ அல்லது அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவோ எந்த ஒரு குறிப்பும் இருப்பது இல்லை.   மேலும் இது குறித்து ஊடகங்களின் எந்த ஒரு கேள்விக்கும் காவல்துறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து விடுகின்றனர்.

மேற்கூறிய தகவல்களை வெளியிட்டுள்ள என் டி டி வி ஊடகம் பல குற்றவாளிகளின் மேல் குற்றங்கள் நிரூபிக்க முடியாது என்பதால் இதுபோல என்கவுண்டர்கள் நடக்கிறதா என ஐயம் எழுப்பி உள்ளது.