டில்லி

யெஸ் பாங்க் குறித்து மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இதோ

யெஸ் பாங்க் தற்போது மிகவும் நஷ்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.  அதை நிரூபிப்பது போல் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட அறிவிப்பில் யெஸ் பாங்கில் இருந்து வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வரை ரூ. 50000 மட்டுமே எடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   திருப்பதி தேவஸ்தானம் சில தினங்களுக்கு முன்பு தனது கணக்கில் இருந்த ரூ.1200 கோடியை மற்றொரு வங்கிக்கு மாற்றி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும்  பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் அதற்கான விளக்கங்கள் பின் வருமாறு

திடீரென ரிசர்வ் வங்கி யெஸ் பாங்க் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதித்தது ஏன்?

யெஸ் வங்கியின் முதலீடு அடிப்படை படி ஒன்றுக்கு சற்றே மேலே உள்ளது. இதனால் வங்கி முறைப்படுத்துவோர் கண்ணோட்டத்தின்படி வங்கியின் நிதி நிலையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே வங்கிப் பணிகளை நடத்த முடியும்.  இதனால் நிதி எடுப்பது கட்டுப்ப்டுத்தபட்டுள்ளது.  இதையொட்டி எஸ் பாங்குக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

ஒருவர் மார்ச் 3 தேதியிட்ட டிமாண்ட் டிராஃப்ட் யெஸ் பாங்கில் இருந்து வாங்கி அளித்துள்ளார். அந்த டிராஃப்ட் இப்போதும் செல்லுபடி ஆகுமா?

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி 2020 ஆம் வருடம் மார்ச் 5 ஆம் தேதி இரவு 8 மணிக்கு முன்பு யெஸ் பாங்க் அளித்துள்ள அனைத்து டிமாண்ட் டிராஃப்டுகள், பே ஆர்டர்கள் செல்லுபடி ஆகும்.  தற்போது எஸ் பாங்க் புதிய டிடி மற்றும் பே ஆர்டர் அளிப்பதை நிறுத்தி உள்ளது.

ஒருவர் ஏற்கனவே யெஸ் பாங்கு காசோலைகள் அளித்து அவை மாற்றப்படாமல் இருந்தாலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டின் தொகை யெஸ் பாங்கில் இருந்து மின்னணு மூலம் வர வேண்டியது இருந்தாலோ என்ன ஆகும்?

மார்ச் 5 க்கு பிறகு யெஸ் பாங்க் எந்த ஒரு காசோலைக்கும் பணம் அளிக்கவோ மற்றும் மின்னணு பரிவர்தனை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை.  ஆகவே யெஸ் பாங்க் காசோலை கொடுத்தவரிடம் அதை திருப்பிக் கொடுத்து வேறு விதத்தில் தொகையைப் பெற வேண்டும்.  மின்னணு மூலம் மியூச்சுவல் ஃபண்ட் தொகை வர வேண்டியது இருந்தால் அதை வேறு வங்கிக்கு மாற்றி விட வேண்டும்.

ஒருவரது மகள் திருமணம் அல்லது மருத்துவம் போன்ற அவசர செலவுகளுக்கு யெஸ் பாங்கில் உள்ள அவரது பணத்தை எடுக்க முடியுமா?

இந்த மாதிரி விஷயங்களுக்கு ரிசர்வ் வஞ்கி சிறப்பு அனுமதி அளித்துள்ளது.  மருத்துவச் செலவு, திருமணச் செலவு மற்றும் கல்விச் செலவு ஆகியவற்றுக்குப் பணம் எடுக்கும் உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது,  இதற்குச் சரியான ஆவணங்கள் மற்றும் தேவையான சாட்சியங்களுடன் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

ஒருவர் பெயரில் யெஸ் பாங்கில் 3 கணக்குகளும் அவருடைய மனைவியின் பெயரில் அதே வங்கியில் 2 கணக்குகளும் உள்ளன.  அவர்கள் ஒவ்வொரு கணக்கிலும் ரூ.50000 எடுக்க முடியுமா?

இல்லை.  அது சாத்தியமில்லை,  வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை  ஒரு தனிப்பட்ட நபரின் பான் எண் அடிப்படையில் அவர் ரூ. 50000 மட்டுமே எடுக்க முடியும்.   அதைப் போல் அவருடைய மனைவி ரூ.50000 எடுக்க முடியும்.   எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒருவருக்கான உச்சவரம்பு ரூ. 50000 ஆகும்.

ஒருவருக்கு யெஸ் பாங்க் கணக்கில் ரூ. 1 லட்சம் உள்ளது.  அவருக்கு அதே வங்கியில் ரூ.80000 கடன் உள்ளது.  அவரால் ரிசர்வ் வங்கி தெரிவித்தபடி ரூ.50000 எடுக்க முடியுமா?

முடியாது.  ரிசர்வ் வங்கி உங்களுக்கு உள்ள கடன் தொகை மற்றும் நீங்கள் உத்தரவாதம் அளித்துள்ள தொகை போக மீதமுள்ள தொகையில் மட்டுமே ரூ.50000 வரை எடுக்க அனுமதி அளித்துள்ளது.  அதனால் மேலே குறிப்பிட்ட நபரால் ரூ.20000 மட்டுமே எடுக்க முடியும்.

ஏற்கனவே யெஸ் பாங்கில்  உள்ள  தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்கள் என்ன செய்வார்கள்?  அவர்களுக்கு வங்கியை நடத்த உரிமை உள்ளதா?

இல்லை.  அவர்கள் வங்கியை இனி நடத்திட முடியாது.   வங்கியின் அனைத்து அதிகார மையங்களையும் ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதால் இனி அங்கு யாரும் இயக்குநர்கள் கிடையாது.

யெஸ் பாங்க் ஊழியர்கள் என்ன ஆவார்கள் ? அவர்களுக்கு ஊதியம் கிடைக்குமா>

ரிசர்வ் வங்கி அளிக்கும் அனுமதியைப் பொறுத்து வங்கி தனது வாடகை மற்றும் ஊழியர்கள் ஊதியத்துக்கான செலவுகளைச் செய்ய முடியும்.