டில்லி

ன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் அதிகம் வாணிகம் செய்யும் ஐந்து நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளன.  இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு சில விதிமுறைகள் பிறப்பித்துள்ளன.  அதன்படி இந்த நிறுவனங்கள் 100% வரை வெளிநாட்டு முதலீடுகளைப் பெற அனுமதி உள்ளது.   ஆனால் அவை பொருட்களாக இருக்கக் கூடாது என்பது முக்கியமாகும்.   அத்துடன் இந்த நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பொருட்களின் விலையை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்த அனுமதி இல்லை.

சமீபத்தில் இந்த இரு நிறுவனங்களும் சமீபத்தில் விழாக்கால விற்பனை எனப் பல பொருட்களை மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்தன. இரு நிறுவனங்களும் இணைந்து ரூ.39000 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. இந்த விற்பனையின் மூலம் இந்த இரு நிறுவனங்களும் விதிமுறைகளை மீறியதாக அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு இ மெயில் மூலம் இரு நிறுவனங்களையும் விளக்கம் கேட்டிருந்தது.   ஆனால் நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையொட்டி மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையிடம் அமைப்பு புகார் அளித்துள்ளது.   இந்த துறையினர் இந்த இரு நிறுவனங்கள் மற்றும் அமைப்பிடம் தனித்தனியே பல சந்திப்புக்களை நிகழ்த்தி உள்ளனர்.  அப்போது இந்த நிறுவனங்கள் இரண்டும் விற்பனையாளர்கள் தங்களுக்கு அறிவித்த விலைப்படி விற்பனை செய்ததாகவும் விலையில் தாங்கள் தலையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

இது குறித்து அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களிடம் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை இந்த தளத்தில் அதிக விற்பனை செய்யும் ஐந்து வர்த்தகர்கள், அவர்கள் விற்ற பொருட்கள், மற்றும் அவற்றின் விலைகள், அவர்கள் அளிக்கும் சலுகைகள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த இரு நிறுவனத்தின் முதலீடுகள், வர்த்தக முறை மற்றும் இருப்பில் உள்ள பொருட்கள் குறித்தும் விவரங்களைக் கேட்கப்பட்டுள்ளது.