திருவனந்தபுரம்

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டருக்கு நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு தொண்டு செய்ய கேரள முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் ஒரே நாளில் மரணம் அடைந்தனர்.   இது தொடர்பாக மருத்துவர் கபீல் கான் கைது செய்யப்பட்டார்.   அவர் தன் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக வாதாடி வந்தார்.  தற்போது அவர் ஜாமினில் வெளி வந்துள்ளார்.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் இதுவரை 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அவர்களுக்கு தொண்டு புரிய நாடெங்கும் உள்ள பல மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அவர்களில் கபீல் கானும் ஒருவர் ஆவார்.  அவர், “நிபா வைரஸ் தாக்கி பலர் கேரளாவில் மரணம் அடைந்துள்ளனர்.   அதை நினைக்கும் போது நான் எவ்வளவோ முயன்றும் என்னால் தூங்க முடியவில்லை.   கேரள முதல்வர் என்னை அந்த மக்களுக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்” என முகநூலில் பதிந்துள்ளார்.

அதற்கு பதிலாக கேரள முதல்வர் பினராயி விஜயன், “தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கேரள மக்களை நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து காக்க பல மருத்துவர்கல்முன் வந்துள்ளனர்.  அதில் கபீல் கானும் ஒருவர் ஆவார்.   இவ்வாறு எந்த மருத்துவர் முன் வந்தாலும் அவர்களுக்கு கேரள அரசு அனுமதி அளிக்க உள்ளது.” என தனது முகநூலில் பதிந்துள்ளார்.