சென்னை: விருப்ப ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நிலையில்,  சுடச்சுட அவருக்கு கட்சியின்  பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையின் அரசு செயலாளராக இருந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ். 1995-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான   இவரது தலைமையின்கீழ்  உள்ள  12,524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில், பாரத்நெட் மூலம்  அதிவேக இணையதள இணைப்புக்கான ஓஎஃப்சி கேபிள் போடுவது சம்பந்தமான துறைகள் இருந்து வந்தது.  இந்த கேபிள் டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு, டெண்டர் மத்தியஅரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு பெற்றார். இது தொடர்பாக திமுகவும் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில்,  சந்தோஷ்பாபு தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில்இணைத்துக்கொண்டார். கட்சியில் இணைந்த உடனேயே அவரை பொதுச்செயலாளராக நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டார்.

தமிழக அரசியல் கட்சிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் இணைவது அதிகரித்து வருகிறது.

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎல் இணைந்து, பதவி பெற்று பிரச்சார பீரங்கியாக வலம் வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில், சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் இணைந்தார். ஆனால், அவரை வெளியே காணமுடியவில்லை.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்  இணைந்து, பொதுச்செயலாளராக பதவி பெற்றுள்ளார். இவரும்  வெளியே தலைகாட்டுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.