மதுரை எய்ம்ஸ்  குழுவில் டாக்டர் சுப்பையாவை நியமனம் செய்தது மத்தியஅரசு!  அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவர் குழுவில், சர்ச்சைக்குரிய  டாக்டர் சுப்பையா சண்முகத்தை  நியமித்தது மத்தியஅரசு என தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறினார்.

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக ஜிப்மர் மருத்துவமனை தலைவரான டாக்டர் .வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  சுதா சேஷையன் உள்பட பலரையும் இயக்குனர்களாக மத்தியஅரசு நியமித்து உள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள  கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் தலைவருமான (அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறை) டாக்டர் சண்முகம் சுப்பையாவை (Dr Shanmugam Subbiah) எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் நிர்வாக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசியத் தலைவராகவும் உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது பிளாட்டின் அருகே உள்ள மூத்த பெண்மணியின் வீட்டுக்கு முன்னால் குப்பைகளை வீசி எறிந்து சிறுநீர் கழித்து அநாகரிக செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவக் குழுவில்  நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், செய்தியாளர்கள் சுப்பையா சண்முகம் நியமனத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர், இது மத்தியஅரசின் நேரடி நியமனம், தமிழகஅரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என கூறி, நேரடியாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.