சென்னை:

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான தேர்தலில் , தூத்துக்குடி மக்களவை தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளராக தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை போட்டி யிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளராக, திமுகவை சேர்ந்த கனிமொழி களமிறக்கப்பட்டார்.

அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில்,  திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 5லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழிசை, சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றதோடு சுமார் 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போது,   திமுக எம்பி கனிமொழி பணபலத்தின் மூலம் வெற்றி பெற்றதாக தமிழிசை  குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில்,  கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கனிமொழி வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.