அகமதாபாத்: டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் டிராகன் பழம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதையடுத்து அந்த பழத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது.

பழத்தின் பெயர் தொடர்பாக பரிசீலனை செய்த அம்மாநில அரசு, டிராகன் பழத்திற்கு கமலம் என்ற பெயர் சூட்டியுள்ளது. இது தொடர்பாக, முதலமைச்சர் விஜய் ருபானி கூறி இருப்பதாவது:

2 காரணங்களுக்காக, குஜராத்தில் டிராகன் பழம் கமலம்  என்று அழைக்கப்படும். அந்த பழத்தின் பெயர் சீனாவை குறிப்பதாக உள்ளது. பெயரும் பொருத்தமானதாக இல்லை.

அதே சமயம் டிராகன் பழம் தாமரை போன்று உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆகையால், கமலம் என பெயர் சூட்டி இருக்கிறோம். பெயர் மாற்றியதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது என்று கூறினார்.