விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு மேற்கொண்டுள்ள கார்த்தி சிதம்பரம், “இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. INX மற்றும் FIPB உடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது சொத்துக்கள் அனைத்தும் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டவை தான். என் இல்லத்தில் 4 முறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட சம்மன்கள் எனக்கு அளிக்கப்பட்டு, ஆஜராகியுள்ளேன். ஒவ்வொரு விசாரணையும் 10 முதல் 12 மணி நேரம் வரை இருக்கும். சிபிஐயின் சிறப்பு விருந்தினராக 12 நாட்கள் நான் இருந்துள்ளேன். ஆனாலும் என் மீது எந்த வழக்கும் இல்லை. எந்த குற்றச்சாட்டும் 2007ம் ஆண்டு தொடர்புடைய சம்பவத்தில் பதிவு செய்யப்படவில்லை. 2017ம் ஆண்டும் என் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் ஆதரவுக்கு நான் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். மூத்த தலைவர்களும், வழக்கறிஞர்களுமான கபில் சிபல், டாக்டர் ஏ.எம் சிங்வி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் எப்போதும் எங்களுடன் இருந்தமைக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

தற்போதைய விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் இந்த நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.