Dravid, Tendulkar want India to play Champions Trophy

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று சச்சின் டென்டுல்கர், ராகுல் திராவிட் உள்ளிட்ட 12 முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்துள்ள புதிய வருவாய்ப் பகிர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சாம்பியன் ட்ராஃபிக்கான இந்திய அணியை பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. ஏப்ரல் 25ம் தேதியே இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ வேண்டும் என்றே இதனைத் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது. ஐசிசியின் புதிய வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தின் படி, இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வரும் 8 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால், இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்குமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஈஎஸ்பின் செய்தி நிறுவனம் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 12 பேரிடமும் கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு அவர்கள் அனைவரும் இங்கிலாந்து சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்திய அணி அவசியம் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு பெற்ற சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் டென்டுல்கர், திராவிட், ஜாஹிர்கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பட்டீல், சஞ்சய் மஞ்ச்ரேகர், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கார், வெங்கடேஷ் பிரசாத், சபா கரீம், முரளி கார்த்திக் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகிய 12 பேரும் கூறியுள்ளனர்.

சாம்பியன் ட்ராஃபி தொடரில் பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்தால், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனான நல்லுறவைப் பாதிக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் 30 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து அத்தகைய முடிவை எடுத்தாலும், தங்களது ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும், தவறினால் உச்சநீதிமன்றத்தின் உதவியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழு நாடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வரும் 7ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இங்கிலாந்து சாம்பியன் ட்ராஃபி தொடரில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.