ஐதராபாத்: எந்த ஒரு கடினமான சூழலையும், அணிக்காக அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீரர்தான் ராகுல் டிராவிட் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண்.

கொரோனா ஊரடங்கால், பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் கஷ்டப்பட்டு பொழுதுபோக்கி வருகின்றனர். பலர், தங்களின் பழைய நினைவுகளைப் பற்றி கூறியும், பலர் சில சாதனை வீரர்களின் செயல்பாடுகளைப் பற்றி புகழ்ந்தும் பொழுதுபோக்கி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியில் ஒருகாலத்தில் அதிரடியாக செயல்பட்ட மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த விவிஎஸ் லட்சுமண், ராகுல் டிராவிட் குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கொள்ளக்கூடிய வீரர். அவர் அணிக்கானவர். அணிக்காக, கடினமான சூழலிலும் விக்கெட் கீப்பிங் செய்ய ஒப்புக்கொண்டவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகவும் களமிறங்கியுள்ளார். எதையும் விடாமுயற்சியுடன் செய்தவர். இவர் மனஉறுதிக் கொண்ட ஒரு மாணவர்” என்றுள்ளார் லட்சுமண்.

இந்திய அணியில் மொத்தம் இரண்டு 300+ ரன் கூட்டணிக்கு சொந்தக்காரர் ராகுல் டிராவிட்தான். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் லட்சுமணுடன் இணைந்து 300+ ரன்கள் கூட்டணியையும், பின்னர் பாகிஸ்தானில் சேவாக்குடன் இணைந்து 400+ ரன்கள் கூட்டணியையும் அமைத்தவர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.