திராவிடம்: அழிக்கப்படவேண்டிய அடையாளம்!

இந்திய தேசியம், இந்து தேசியம், திராவிட தேசியம், தமிழ்த்தேசியம்.. என்பவை குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான  துரை நாகராஜன் தனது கருத்துக்களை கட்டுரையாக்கியிருக்கிறார். இவை முழுதும் அவரது கருத்து.

இதற்கான எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. மறுதலிப்பு இன்றி அவை பிரசுரிக்கப்படும்.

கால்டுவெல்

யாரோ அன்னியர்கள் தமிழ்நாட்டை திராவிடம் என்று சொன்னதற்காக தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வது சரியல்ல’ என்கிறார் நாமக்கல் கவிஞர். (தமிழ் மொழியும் தமிழரசும், பக்கம் : 48)

எட்டாம் நூற்றாண்டில், அசாம் பகுதியைச் சேர்ந்த குமரில பட்டர் என்கிற சமஸ்கிருதவாதியும், பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த எல்லீசும்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில், அயர்லாந்தைச் சேர்ந்த கால்டுவெல்லும்தான் அந்த யாரோ அன்னியர்கள்.

தென்னிந்திய மொழிகளுக்கு இடையிலான ஒப்பீட்டை விரிவாக ஆராய்ந்த கால்டுவெல் ‘தமிழ்க் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொள்வதே நியாயமாக இருந்திருக்கும். ஆங்கிலேயர்களிடம் ஆரியர்கள் ஏற்படுத்திக்கொண்ட நல்லுறவும், அவர்களுடைய தவறான வழிகாட்டுதலுமே, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பின் கீழ்  ஆய்வு நடக்க காரணமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, தோடா, கோடா, கோண்டு, கூ, கொடகு, ராஜ்மகால், ஓரோவோன் முதலிய பன்னிரெண்டு மொழிகளை திராவிட மொழிகள் என பட்டியலிடுகிறார் கால்டுவெல்.  உண்மையில் இவையெல்லாம் தமிழ்க்குடும்ப மொழிகள் அல்லது தமிழின் கிளை மொழிகள் என அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

நாமக்கல் கவிஞர்

தமிழின் பெருமையை சிதைப்பதற்காக, ஆரியர்கள் வடிவமைத்த திராவிடத் திட்டம், கால்டுவெல் வருகைக்குப் பிறகு வேகமான செயல்பாட்டுக்கு வந்தது. 1856ஆம் ஆண்டு கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலே தமிழ்ப்பரப்பில் திராவிடச் சிந்தனை வளர பெருங் காரணமாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக 1881ஆம் ஆண்டு நடைபெற்ற  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தீண்டத் தகாதவர்களை ‘சாதியில்லா திராவிடர்கள்’  என பதிவு செய்து கொள்ளும்படி அயோத்தி தாச பண்டிதர் அறிவித்தார். 1893 ஆம் ஆண்டு, இரட்டைமலை சீனிவாசன் ‘பறையர் மகா ஜன சபையை ‘ஆதி திராவிட மகா ஜன சபை’ என பெயர் மாற்றினார். நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பெரியார்  1944 ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ தொடங்கினார்.

திராவிடம் என்ற சொல்லை தமிழர்கள் பயன்படுத்திய நோக்கமும், தமிழர் அல்லாதோர் பயன்படுத்திய நோக்கமும் வேறுவேறாக இருந்தது. பெரியார், அண்ணா முதலான தலைவர்கள் தமிழ்பேசும் ஆரியர் அல்லாதவர்களை ஒருங்கிணைக்கும் அரணாக திராவிடத்தை பார்த்தனர். ஆரியர்களோ தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாகக் கையாண்டனர்.

ஆரியர்கள் எழுதிய மனுதர்ம சாஸ்திரம் ‘திராவிடர்கள் சாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள். திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்’ என்கிறது. (அத்தியாயம் : 10 ஸ்லோகம் 43, 44)

இதன் மூலம், தமிழர்கள் சாதிபோற்றியவர்கள் இல்லை என்பதும், தமிழர்களை இழிவு படுத்தவே திராவிடம் என்ற சொல்லை ஆரியர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

ஆரியர்கள் கட்டமைத்த சைவசமய வளர்ச்சிக்கு பாடுபட்ட  திருநாவுக்கரசரும் ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்’ என்றே பாடுகிறார். (ஆறாம் திருமுறை, பாடல் எண் : 5) ஆரியன், தமிழன் என்றிருந்த நிலைமாறி ஆரியன் திராவிடன் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தமிழ் இனத்தின் அடையாள அழிப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

‘ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் ‘த்ரமிளர்’ என்றழைக்கப்பட்டு ‘த்ரவிடர்’ என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்றுள்ளது’ என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஒரு ஆட்சி அகற்றப்படும்போது, வென்ற அரசனும் அவனுடன் குடியேறியவரும் பேசுகின்ற மொழி மக்கள் பேசிக்கொண்டிருக்கும் மொழியோடு கலக்கும். புது மொழியை அது உருவாக்கவும் செய்யும்.  ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் கலப்பில் புதுமொழி உருவாகின்றன.

கிமு ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கி, கிபி 2ம் நூற்றாண்டுவரை சாதவாகனர்கள் தக்காணத்தை தலைமையிடமாக்கக் கொண்டு தெலுங்கானாவரை ஆட்சி செய்தனர். அவர்கள்பேசும் மொழியான பிராகிருதத்தின் கலப்பு மிகுதியால் தெலுங்கு என்ற புதுமொழி உருவானது.

மூன்றாம் நூற்றாண்டில், தமிழகத்தில் களப்பிரர்களும், சாதவாகனர்களிடம் குறுநில மன்னர்களாக இருந்த பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். களப்பிரர்களின் பாலிமொழியோடு, காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்களின் பார்சி மொழியும், தமிழும், தெலுங்கும், சமஸ்கிருதமும் கலந்ததால் கன்னடம் என்ற புது மொழி உருவாகியது.

மொழிகள் உருவாக்கப்படுவதில்லை. தாமாக தன்னை கட்டமைத்துக் கொள்கின்றன.  மக்களின் வாழ்வியலோடு இணைந்து தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அரசியலும், பண்பாடும், தேவைகளும் புதிய மொழி உருவாகக் காரணமாக அமைகிறது. வாழும் மொழிகள் வழக்கொழிவதும், புதுமொழிகள் உருவாவதும் கால ஓட்டத்தில் தடுக்க முடியாதவை.

‘மலையாள நாட்டின் எல்லையில் இருப்போர் மலையாளம் பேசுவதுபோல் தமிழைப் பேசுவர். சிங்கள நாட்டில் இருப்போர் சிங்களத்தைப்போல தமிழை உரைப்பர். இவ்வாறே மலாயாவின் சீன மொழியைப் போலும், அமிரிக்கத் தீவுகளில் ஆங்கிலத்தைப் போலும் தமிழை உரைத்து வருகின்றனர்’ என்கிறார் உலகமெல்லாம் சென்று தமிழ்வளர்த்த தனிநாயக அடிகள். (தமிழ்த் தூது, பக் : 2, 3)

தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு பகுதியில் வழங்கும் வட்டார வழக்குச் சொற்களின் அர்த்தம் இன்னொரு பகுதியில் வாழ்பவருக்குத் தெரிவதில்லை. உதாரணத்துக்கு கொங்குநாட்டிலே  போச்சாது,  நடவை, பொறகால, அவத்தைக்கு, இவத்தைக்கு என நூற்றுக்கணக்கான சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழகத்தின் பிறபகுதியில் வாழும் தமிழர்கள் இதை எப்படி பொருள் கொள்வார்கள்? போச்சாது – பரவாயில்லை விடு, நடவை – வெளிப்புறக் கதவு, பொறகால – பின்புறம், அவத்தைக்கு – அங்கே, இவத்தைக்கு – இங்கே. (கொங்கு வட்டாரச் சொல்லகராதி : பெருமாள் முருகன்)

ஒருமொழியில் புரியாத சொற்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது இயல்பாக புதுமொழி உருவெடுக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழிலிருந்து முழுவதுமாக தனி மொழியாகிவிட்ட மலையாளத்தில் நீங்கள் – நிங்கள், நன்றி – நன்னி, உணவு – ஊணு என பல சொற்கள் சிறு ஒலி மாற்றத்துடன் பயன்படுத்தப் படுகிறது. செவி, நோக்கு, விளி என நாம் பேசமறந்த பல பழந்தமிழ்ச் சொற்களை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கில் வழங்கப்படும் அக்காள் – அக்க, அத்தை – அத்தகாரு, அன்னம் (சோறு) – அன்னமு, அது – அதி முதலான பல சொற்கள் ஒலிமாற்றத்துடன் தமிழ்ச் சொற்களாகவே பயன்படுத்தப் படுகின்றன.

ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பது போலத்தான் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி தோன்றுவதும். ஒரு தாய்க்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் அந்தத் தாயின் குழந்தைகளாகவே அடையாளம் கணப்படுவார்கள். தமிழ்த் தாயிடமிருந்து உருவான மொழிகள் அனைத்தும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் இன்று, தமிழில் இருந்து தோன்றிய 80க்கும் அதிகமான மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக பார்க்கப்படுகின்றன.

‘ஆந்திரம், மலையாளம், துளுவம், கன்னடம் என்பன முறையே அவ்வம் மொழிக்கும், நாட்டுக்கும் பெயராகவே வழங்குகின்றன். அம் மொழியினர் தம் நாட்டையோ, மொழியையோ, திராவிடம் என்று சொல்லுவதில்லை, தங்களைத் திராவிடர் என்று கூடப் பேசுவதில்லை’ என்று எழுதுகிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். (செங்கோல் 21.01.1951)

உண்மை இப்படி இருக்க, இன்னும் எதற்காக தமிழர்கள் திராவிடத்தை தூக்கிப் பிடிக்க வேண்டும்? யாருக்காக திராவிடத்தை கொண்டாட வேண்டும்? திராவிடத்தை போற்றுவதும், திராவிடத்தைக் கொண்டாடுவதும் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் செய்கிற துரோகம்.

கட்டுரையாளர் துரை.நாகராஜன்

தமிழில் இருந்து தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் பேசும் மக்களை- பெருந்தமிழ்க் குடும்பத்திலிருந்து பிரித்து பொது அடையாளத்தைக் உருவாக்குவதற்கும், இலக்கிய வளமையும், இலக்கண நேர்த்தியும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட தமிழர்களை சூத்திரர்கள் என்று பழிப்பதற்கும், ஆரியர்களால் உருவாக்கப்பட்ட சூதுச் சொல்தான் திராவிடம். ஆரியர்கள் உருவாக்கிய அடையாளத்தை சுமந்து திரிந்தது போதும். திராவிட அடையாளம் அழித்து தமிழனாய் நிமிர்வோம்.