திராவிட சுடுகாடு மெரினா! தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம்! :  சீமான் காட்டம்!

சென்னை மெரினா கடற்கடையை திராவிட சுடுகாடு எனவும், அது தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவருக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனையை நீக்க வலியுறுத்தி கடந்த 2011 ஆம் ஆண்டு தீக்குளித்து மாண்டவர் செங்கொடி.

அவரது நினைவேந்தல் நிகழ்வு நேற்று  சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிட கட்சிகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தார்.

அவர் பேசியதாவது:

“தமிழர்கள் நிலத்தில் எதற்காக திராவிட அரசியல்? இவை ஆரிய – பார்ப்பனர்களுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் என்றால் ஜெயலலிதா 35 ஆண்டுகாலம் ஓர் திராவிட கட்சிக்கு தலைமை வகித்தது எப்படி?” என்று  சீமான் கேள்வியெழுப்பினார்.

மேலும், “இட ஒதுக்கீடு, சமூக நீதி என்ற பெயரால் மக்களை ஏமாற்றுகின்றன திராவிட இயக்கங்கள். இங்கு கல்வியில் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளின் பட்டியலில் வெறும் 5 மட்டுமே தமிழ்சாதிகள் ஆகும். மற்றவை  எல்லாம் பிற இனத்தைச் சேர்ந்த சாதிகள். ஆக, இந்த மண்ணுக்கு சொந்தமில்லாதவர்கள் நம் மக்களை திராவிட அரசியலின் மூலம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், சென்னை மெரினா கடற்கடையை திராவிட சுடுகாடு எனவும், அது தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம் என்றும் காட்டமாக தெரிவித்தார்.