திராவிட மறுமலர்ச்சிக்கு வித்திட்டது மதவாதமா ? இனவாதமா ?

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

டந்து முடிந்த சட்டசபை தேர்தல் 2021 -ல்  முன்னெப்போதும் இல்லாததை போல் பெரியாரும், திராவிடமும் பரப்புரையின் மையக்கருவாக இருந்தது. திராவிட கழகங்கள் தொடங்கிய காலம் தொட்டு எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும், மிக சமீபத்திய காலங்களில் திராவிட  சித்தாந்தம், கொள்கை அதிக அளவுக்கான விவாத கருப்பொருளாக மாறியது. எதிரியே ஒருவனை வலுவாக்குவான் என்ற கூற்றுக்கேற்ப திராவிடத்தின் மீதான கேள்விகளால் திராவிட சிந்தனையை மறுமலர்ச்சி செய்துள்ளார்கள். தொன்று தொட்டு, திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி வந்தாலும் பெரும்பாலான அனுதாபிகள் திராவிட கொள்கையோ, அவர்கள் சார்ந்த இயக்கம் சாதித்த சாதனையையோ அறியாமல் இருந்து வந்தார்கள். பெயரளவில் பெரியாரும், சொல் அளவில் திராவிடமும் இருந்தது. அதை பற்றிய பெரிய ஆராய்தலும், புரிதலும் இல்லாமலே தொண்டர்கள் இருந்து வந்தார்கள். இதனால் படித்த இளைய சமூகத்தினரிடையே திராவிடம் வெல்ல முடியாமல், கருத்து சென்று அடையாமல் திசை மாறினார்கள். இந்த இளையோர் கூட்டம், பெரும்பாலும், வசீகரமான பேச்சாலும், உணர்ச்சிமிகு அதிகாரத்தின் மீதான கேள்விகளாலும் வசீகரிக்கப்பட்டு இனவாதம் அல்லது மதவாதம் நோக்கிய அரசியல் பயணத்தில் சேர்ந்தார்கள். இதில் பெரும்பாலான இளைஞர்கள், திராவிட இயக்க போராட்டங்களால் கல்வி, வேலைவாய்ப்பு,சமூக நீதி பயன் பெற்றோர் ஆவார்கள். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதையின் வழித்தடம் தெரியாமல் இருந்தார்கள்.

இத்தகைய சூழலில், தொடர்ச்சியாக மதவாதத்தால் பெரியார் மீது வைக்கப்பட்ட விமர்சனம் பல இளையோரையும் பெரியாரை மீள அறிமுக படுத்தியது. அவருடைய கொள்கை மற்றும் சித்தாந்தத்தை தேடி படித்தார்கள். மேலும், சுபவீ,  கரு.பழனியப்பன், பேராசிரியர் அருள் மொழி, ஆ.ராசா, போன்றோரின் அருமையான விளக்கங்களும், மிக தெளிவான சிந்தனையும் பதில் உரைகளும், பெரியாரின் பிம்பத்தை மீள கட்டி எழுப்பியது. இன்றைய வெற்றிகளுக்கும், நிலைஉயர்விக்கும் அடித்தளம் இட்டவர் பெரியார் என்று அறிந்த போதுஇளைஞர் சமூகம் அவரை மானசீகமாக ஏற்று உள்ளூர  கொண்டாடினார்கள். தெய்வ பக்தியில் திளைத்தாலும், எந்த சமயத்தை பின்பற்றினாலும், கடவுளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் பெரியாரை ஏற்றார்கள்.

இதேவேளையில், திராவிட சித்தாந்தத்தின் மீதான இனவாத தாக்குதலும் வலுமையாக தொடுக்கப்பட்டது. இந்த தேர்தலில்  திராவிடத்தின் மீது மத மற்றும் இனவாத இருமுனை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்றால் அதுமிகை ஆகாது. திராவிடம் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. திராவிடம் தமிழர் நலனுக்கு எதிரான சித்தாந்தம் என்று சித்தரிக்கப்பட்டது. அது தமிழ் சமூகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றும் மாறாக தமிழ் சமூகத்தை சீரழித்ததாக சித்தரிக்கப்பட்டது.

திராவிடத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விளக்கமளிக்க PTR தியாகராஜன், ஆ. ராசா, பேராசிரியர் ஜெயரஞ்சன், சுப.வீ. போன்றோர் வலுவான எதிர் வாதங்களையும், விளக்கங்களையும் அளித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் திராவிடம் குறித்தான விளக்கங்களும், சித்தாந்தங்களும் பாமரனுக்கும் கொண்டு செல்லப்பட்டது. திராவிட இயக்கங்களின் சாதனை பட்டியல் பிரமிக்க தக்க வகையில் இருந்தது. படித்த இளைஞர்களால் அது பெரும் வரவேற்புடன் ஏற்கப்பட்டது.

இந்த கால சூழ்நிலையில், திமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை வலுப்பெற்றது. உதயநிதியின்  இளைஞர் அணி தலைமை புதிய உத்வேகத்தையும் திசைமாற காத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தையும் திராவிடத்தின்பால் ஈர்த்தது.  திசைமாறி பயணப்பட்ட இளையோரை, திராவிடத்தின் பால் ஈர்க்கும் பொறுப்பை Dr. செந்தில் குமார் மற்றும் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் ஏற்று செயல்பட்டனர். இந்த பணியில் கணிசமான அளவில் வெற்றியும் பெற்றனர்.

கால சூழ்நிலைக்கேற்ப, திராவிட சித்தாந்தத்தில் சுற்றுசூழியல் குறித்தான விழிப்புணர்வும் அவசியமும் உணர்ந்து தீவிர சுற்றுசூழியல் ஆர்வலர்களான கார்த்திகேய சிவசேனாதிபதி போன்றோர் அடையாளம் கண்டு திராவிட இயக்கத்தில் முக்கிய பொறுப்பு கொடுத்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்கள். அது, திராவிடத்தின் மறுதலுக்குரிய தன்மையை வெளிப்படுத்தியது. மேலும் சுற்றுசூழியல் பால் ஏற்பு கொண்ட பலரையும் திராவிடம் பால் ஈர்த்தது.

திராவிட இயக்கம் மண்ணுக்கான அரசியல் பேசி வந்ததால் தமிழகத்தில் இருந்து வேலை நிமித்தமாகவும் வாழ்வியலுக்காகவும் கடல் கடந்து சென்ற தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களின், அடிப்படை அரசியல் தேவைகளுக்கான வாய்ப்புகளையும் தரவில்லை. இந்த தவறை உணர்ந்த திராவிட இயக்கம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலன் குறித்து செயல்படுவதற்கு TRB. ராஜா தலைமையிலான வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான துணை அமைப்பை கண்டது. இது மெல்ல, வெளிநாடு வாழ் தமிழர்களை திராவிட இயக்கத்தின் பால் ஈர்த்து அவர்களுக்குரிய அரசியல் வாய்ப்புகளை கொடுப்பதில்லாமல் அவர்களின் எதிர் கால நலனையும் காக்கும். மேற்கூறிய சுற்று சூழியல் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் துணை அமைப்புகள் திராவிட இயக்கத்தை மிடுக்காக மெருகேற்றியது.

இதன் தொடர்ச்சியாக, திராவிட சித்தாந்தத்தின் மீதான தாக்குதல் மற்றும் பெரியார் மீதான விமர்சனங்களில் இருந்த தற்காப்பு நிலையில் இருந்து திராவிட பற்றாளர்கள், போதிய அறிவுசார் தகவல்கள் கிடைக்க பெற்றவுடன் பெருவாரியான படித்த இளையோர்கள் மதவாதம் மற்றும் இனவாதத்திற்கான எதிர் தாக்குதலை தொடுத்தார்கள். களம் சூடாகியது. இந்த நிகழ்வு திராவிட சித்தாந்தத்தின் அவசியத்தை அனைவர்க்கும் தெளிவாக உணர்த்தியது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய நிகழ்வு, திராவிடம் மற்றும் பெரியார் மீதான தாக்குதல்கள் அனைத்தும் திமுகவின் மீதானதாக இருந்தது. இதன் மூலம், திமுகவே, திராவிட மற்றும் பெரியாரிய சித்தாந்தத்தின் ஏக பிரதிநிதியாக தமிழக மக்களால் பார்க்கப்பட்டார்கள். இந்த நிகழ்வு, திராவிட பேரியக்கத்தின் மறுமலர்ச்சியை மீண்டும் தமிழக மண்ணில் இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கு வேரூன்றி நிலைக்க செய்துள்ளது.

திராவிடம், சாதிய, தூய இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரானது என்பதை இந்த தேர்தலில் நிரூபிக்கும். திராவிட பேரியக்கம் பெண்ணுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, மாநில உரிமை, சுயமரியாதை, சமூக நல்லிணக்கம், அனைவருக்கும் கல்வி, சம தர்ம சமூகம் இவைகளின் மொத்த உருவத்தின் ஒரு சொல் என்றால் அது மிகையாகாது. இந்த சித்தாந்தத்தில் கூடுதலாக இப்போது சுற்றுசூழியல், பொருளாதார மாற்று சிந்தனைகளும்  இணைக்கப்பட்டுள்ளது. இவை காலம் அளித்த அவசிய  தேவை என்பதாலும், திராவிடம் என்றும் தன்னை மெருகேற்றும் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த அறிவுசார் கருத்துக்களுக்கு என்றும் செவி கொடுக்கும் என்பதை மீண்டும் தமிழ் சமூகத்தில் நிரூபித்துள்ளது.

திராவிடத்தின் மறுமலர்ச்சியில் மதவாதத்திற்கும், தூய இனவாதத்திற்கும் பெரும் பங்குள்ளது. தமிழர்களும், திராவிட பேரியக்கமும் என்றும் தமது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் ஏனெனில் திராவிட சித்தாந்தம் தீவிர சிந்தனையாலும் சமூகத்தின் அவசியத்தாலும் நிர்மாணிக்க பட்டது. ஆனால், அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் மதவாதிகளும், தூய இனவாதிகளும் என்றால் அது மிகையாகாது.