கிரிக்கெட் போட்டிகளில் சோபிக்கும் டிராவிட்டின் மகன் – இரட்டை சதமடித்து அசத்தல்!

பெங்களூரு: இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் மகனும் ஒரு டெஸ்ட் போட்டியில் அசத்தியுள்ளார்.

பொதுவாக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றிதான் அடிக்கடி செய்திகள் வரும். ஆனால், தற்போது முதன்முறையாக ராகுல் டிராவிட்டின் மகனைப் பற்றி செய்தி வந்துள்ளது.

தற்போது 14 வயதேயான டிராவிட் மகன் சமித், கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பு நடத்திய அண்டர் – 14 கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், வைஸ் பிரசிடென்ட் லெவன் அணிக்காக ஆடினார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்கஸிலும் ஆட்டமிழக்காமல் 94 ரன்களை அடித்தார். அந்த இரட்டை சதத்தில் 22 பவுண்டரிகள் அடங்கும்.

இவைதவிர, பந்துவீசியதுடன் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார். ஆனாலும், ஒரு ஏமாற்றம் என்னவென்றால், இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. டிராவிட்டின் மகன் இடம்பெற்ற அணியால் வெற்றியைப் பெற இயலவில்லை.

இதற்கு முன்னர் தான் கலந்துகொண்ட அண்டர் – 14 போட்டிகளிலும் சதங்களை அடித்து அசத்தியுள்ளார் சமித். தனது தந்தையைப் போலவே இவரும் எதிர்காலத்தில் கிரிக்கெட் சுவராக உருவெடுப்பாரா? என்று விமர்சகர்கள் கருத்துக்கூறத் துவங்கியுள்ளனர்.