ஏ சாட் சோதனைக்கு என்னிடம் அனுமதி கோரவில்லை : முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்

டில்லி

ன்மோகன் சிங் பதவிக்காலத்தில் ஏ சாட் சோதனைக்கு ராணுவப் பிரிவு தம்மிடம் அனுமதி கோரவில்லை என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மீதும் ஒரு முக்கிய செய்தி அறிவிக்கப்போவதாக தெரிவித்தார்.   அதை ஒட்டி கடும் பரபரப்பு ஏற்பட்டது.   அவர் தனது செய்தியில் ஏ சாட் என்னும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.  ஏ சாட் என்னும் இந்த ஏவுகணை வானில் பறக்கும் செயற்கைக் கோளை குறிபார்த்து தகர்க்கக் கூடியதாகும்.

முன்னாள் டி ஆர் டி ஓ தலைவரும் தற்போதைய நிதி அயோக் உறுப்பினருமான சரஸ்வத் நேற்று  செய்தியாளர்களிடம், “இந்த ஏவுகணை சோதனை கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே நடத்த இருந்தோம்.  இது குறித்து நான் அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் கடந்த 2012 ஆம் வருடம் நான் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரவை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட யாருமே எனக்கு அனுமதி அளிக்கவில்லை.   இதற்காக எந்த காரணமும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.   அவர்கள் காரணம் கூறாமல் மவுனம் சாதித்தனர்.” என தெரிவித்தார்.

இந்த செய்தி ஊடகங்களில் கடும் பரபரப்பை உண்டாக்கியது.   அப்போதைய தேசிய பாதுகாப்பு செயலரான சிவசங்கர் மேனன் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

சிவசங்கர் மேனன், “நான் சரஸ்வத் குறிப்பிடும் கால கட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணி ஆற்றினேன்.   ஆனால் ஏ சாட் சோதனைக்கு அனுமதி அளிக்குமாறு டி ஆர் டி ஒ வை சேர்ந்த யாரும் என்னிடம் கேட்கவில்லை.   ஒரு வேளை அவர் அமைச்சர்களுக்கு இது போல் ஒருஏவுகணை உள்ளது என தெரிவித்திருக்கலாம்.  ஆனால் சோதனை நடத்த அனுமதி கோரவில்லை” என கூறி உள்ளார்.

அதே நேரத்தில் கடந்த 2012 ஆம் வருடம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சரஸ்வத், “நாங்கள் ஏ சாட் ஏவுகணையை சோதனை செய்வதை விரும்பவில்லை.   தற்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ள போதிலும் இந்த சோதனையால் ஒரு செயற்கைக் கோள் அழிக்கப்பட்டால் அதன் துகள்கள் வானில் பரவி மற்ற செயற்கைக் கோள்கள் பாதிப்படையும் அதனால் இந்த சோதனையை நாங்கள் நடத்தப் போவதில்லை” என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published.