புதுடெல்லி: நீர்மூழ்கி கப்பலிலிருந்து 5000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணையை உருவாக்க டிஆர்டிஓ அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியாவிடம் தற்போதைய நிலையில், அதிகபட்சமாக 5000 கி.மீ. வரை பறந்துசென்ற தாக்கும் வகையிலான அக்னி – 5 ஏவுகணை மட்டுமே உள்ளது.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து என்று பார்த்தால், கே-4 என்ற ஏவுகணை 3500 கி.மீ. தூரம் வரை பறந்துசென்று தாக்கும். இந்நிலையில், நீர்மூழ்கி கப்பலிலிருந்து, 5000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை சென்று தாக்கும் வகையிலான ஒரு புதிய ‘கே’ வரிசை ஏவுகணையை தயாரிப்பது குறித்து இந்திய ராணுவ ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ திட்டமிட்டு வருகிறது.

இந்தவகை ஏவுகணை தயாரிக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்த ஆசியா, ஆப்ரிக்காவின் பல நாடகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தோ – பசிபிக் பகுதியிலுள்ள நாடுகள் ஆகியவற்றை தாக்கும் சாத்தியம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இதற்கான திறன் தங்களிடம் இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.