சென்னை,

ந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற தனது  கனவு தற்போது நனவாகி உள்ளது. திறம்பட விளையாடு வேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இருந்து, சொந்த காரணங்களை காட்டி  தவானும், புவனேஸ்வர் குமாரும் விலகி உள்ளனர்.

அதன் காரணமாக புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தமிழக ரஞ்சி வீரரான விஜய் சங்கரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

ஏற்கனவே ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி வரும் விஜய்சங்கர், வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவார் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டாவது ஆட்டத்தில், முரளி விஜய்யுடன் விஜய்சங்கர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த வீரரான விஜய்சங்கர் இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து விஜய்சங்கர் கூறியதாவது,

இந்திய கிரிக்கெட் அணியினரின்  இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் கனவு. எனக்கும்  அந்த கனவு இருந்தது. அது தற்போது  நிறைவேறி இருக்கிறது.  தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி எனது  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த  ஆவலுடன் இருக்கிறேன்.

மேலும், முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்துள்ளேன். அதனால் எந்த வரிசையில் இறங்குகிறேன் என்பது பிரச்னையில்லை. பந்துவீச்சிலும் சிறந்த ஆலோசனைகளை பெற்றுள்ளேன். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி எனக்கு சிறந்த ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லைக்காரரான விஜய்சங்கர், முதல் தர போட்டிகளில் விஜய் சங்கரின் சராசரி, 49.17.  இவர்  ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.