மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க 2 மீட்டர் தொலைவில், 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்க அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், இதற்காக பிரத்யேகமாக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ரிக் இயந்திரத்தின் மூலம் 4 மணி நேரத்தில் துளையிட முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 35 அடி ஆழத்திற்கு தோண்டி, அந்த இயந்தரம் பழுதடைந்தது. அதனை தொடர்ந்து புதிதாக ராமநாதபுரத்தில் இருந்து லார்சன் அன்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து பழைய ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு அதிக திறன் கொண்ட இயந்திரம் கொண்டுவரப்பட்டு, துளையிடும் பணி தொடர்ந்தது. நள்ளிரவு 12.05 மணிக்கு தொடங்கிய இப்பணி, இன்று பகல் 1 மணி வரை நடைபெற்றது. ஆனால் கூடுதலாக 10 அடி மட்டுமே அந்த இயந்திரத்தால் தோண்டப்பட்டது. கடினமான பாறைகள் காரணமாக இந்த இயந்திரமும் பழுதடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது சுர்ஜித்தை மீட்க போர்வெல் இயந்திரம் மூலம் முதலில் கடினமான பாறையில் மூன்று துளைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ரிக் இயந்திரம் மூலம் தொடர்ந்து துளையிடும் திட்டம் போடப்பட்டது. ஆனால் அப்போதும் பாறைகளை உடைக்க முடியாது என்பதால், 6 துளைகளை போட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் படி தற்போது போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 20 அடி ஆழத்திற்கு 4 துளைகள் போடப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 2 துளைகளை போடும் பணி நடைபெற்று வருகிறது. துளையிடும் போது நீர் கலந்த மண்ணும் சேர்ந்து வெளியேறுவதால், இந்த பாறைகளை உடைத்த பின்னர் வேகமாக துளையிட்டு சுர்ஜித்தை காப்பாற்ற முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.