ஆன்லைனில் ஆசைவார்த்தை..  ஏமாந்துபோன போதை விரும்பிகள்..

களத்தில் இறங்கி திருட்டு, கொள்ளை அடிப்பவர்களைவிட படுகில்லாடிகளாக இருக்கிறது உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தை பிடுங்கும் ஆன்லைன் ஃபிராடு கும்பல்

அதிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்  டிசைன் டிசைனா ஆன்லைன் பிராடு செய்வதில் புது சாதனையே படைப்பார்கள்போல.

 கொஞ்ச நாள் முன்னாடி SBI பேங்க் மேனேஜர் பேசுறதா சொல்லி ATM நம்பர்,  PIN நம்பரையெல்லாம் வாங்கி நிறைய பேர் பணத்தை ஆட்டைய போட்டார்கள்..  தொடர்ந்து OLX மாதிரியான வெப்சைட்களில் விளம்பரம் தருபவங்களை குறி வைத்து, ஆன்லைன்ல பணம் பிடுங்கினார்கள். இப்போ இந்த ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகளெல்லாம் அடைக்கப்பட்டதை பயன்படுத்தி புது விதமாக யோசித்து மீண்டும் தலை தூக்கியிருக்கு அதே மாதிரியான ஆன்லைன் பிராடு.

சில தினங்களுக்கு முன் திடீரென்று சில சமூக வலைத்தளங்களில் அண்ணாநகர் டாஸ்மாக் எலைட் கடைகளிலிருந்து ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில் கடையடைப்பு அமலில் உள்ளதால் இவர்கள் ஆன்லைன் மூலமாக மது வகைகளைச் சற்று கூடுதல் விலையில் விற்பனை செய்வதாகக் கூறியது அந்த விளம்பரம். இதற்கென பிரத்தியேகமாக 7064278160 மற்றும் 9983670439 ஆகிய இரண்டு மொபைல் நம்பர்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை உண்மை என்று நம்பி கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்த போது அதற்கான முழுத்தொகையோ அல்லது பாதியோ ஆன்லைனில் செலுத்த வேண்டும்  என்றும் கேட்டுக்கொள்ளப்பட பலரும் அதே போல ரூ் 500/- முதல் ரூ. 2,500/- வரை பணம் செலுத்தியுள்ளனர்.  அத்துடன் அவர்களின் எண்கள் ப்ளாக் செய்யப்பட்டு விட்டது.

இந்த விளம்பரத்தைப் பார்த்த ஒருவர் தனது பிறந்தநாளுக்கு நண்பர்களுக்கு விருந்து தர நினைத்து ஆர்டர் செய்துள்ளார்.  இவரிடம் கூகுள் பே மூலமாக முழு பணத்தையும் செலுத்தும்படி சொல்ல இவரும் அதே போல ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் நம்பருக்குப் பணத்தை அனுப்பியுள்ளார்.  பின்பு ஆர்டர் நிலவரம் குறித்து அறிய அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது தான் அவர் எண் ப்ளாக் செய்யப்பட்டது தெரிந்திருக்கிறது.  வேறு நம்பர்களிலிருந்து தொடர்பு கொண்டால் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

அதேபோல அண்ணாநகரைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் இந்த விளம்பரத்தைப் பார்த்து இந்த நம்பரை தொடர்பு கொண்டுள்ளார்.  “இந்த நம்பரை கூப்பிட்டதும் இந்தியில் ஒருத்தர் பேசினாரு.  ரெண்டு மூனு பாட்டில் தான் இருக்கு. வேணும்னா உடனே 1500 ரூவா அனுப்புங்கனு சொன்னாரு.  நான்  750 அனுப்புறதா சொல்லி ஓகே பண்ணிட்டு உடனே ஆன்லைன்ல அனுப்பிட்டு போன் பண்றேன், அவரு போன் ஸ்விட்ச்டு ஆஃப்.  அதோட சரி…” என்கிறார் இவர் ஏமாற்றத்துடன்.

இது குறித்த யாரும் இதுவரை புகார் அளிக்காததால் காவல்துறை இன்னமும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.  நாங்கள் இந்த எண்ணை அழைத்து பேசிய போதும் எங்களிடமும் அதே போல பாதி தொகை கூகுள் பே மூலமாகச் செலுத்தச் சொன்னார் ஒருவர்.  தொடர்ந்து அண்ணாநகர் டாஸ்மாக் எலைட் ஷாப் ஊழியரை தொடர்பு கொண்ட போது, “சார் நாங்க கடை அடைச்சு தான் இருக்கோம்.  எங்களுக்கும் இதே போல நிறைய கம்ப்ளைண்ட்ஸ் வந்திருக்கு.  நாங்க அடுத்து போலீஸ்ட்ட எடுத்திட்டு போக இருக்கோம் இந்த விசயத்தை” என்றார்.

நன்றாகப் படித்தவர்களே இது போன்ற ஆன்லைன் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதையும் சரிபார்க்காமலேயே பணத்தைச் செலுத்தி ஏமாறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோர், தான்  ஏமாந்தது வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி அமைதியாகக் கடந்து விடுவதுதான். இந்த அமைதியே அயோக்கியர்களுக்கு மிகவும் சாதகமாகி விடுகிறது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத் தான் செய்வார்கள் என்று தெரியாமலா சொன்னார்கள்.

-லெ ட்சுமி பிரியா