குடிதண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது…..?

மிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில் தற்போது குடி தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல இடங்களில் மக்கள் தண்ணீருக்காக கலர் கலரான பிளாஸ்டிக் குடங்களுடன் இரவு பகல் பாராது அலையும் பரிதாப நிலை உருவாகி உள்ளது.

சென்னைக்கு  குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான  செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகள் வறண்டு போய் தரிசாக காட்சி அளிக்கின்றன.

இந்த ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. ஏரிகளில் போதுமான நீர் நிரம்பியிருக்கும் நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது ஏரிகள் வறண்டு போயுள்ளதால் குடிநீர் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னைக்கு அதிக மழை தரக்கூடிய மாதங்களான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, கடந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தில், இயல்பை விட குறைவாக  மழை பெய்ததால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவத்தொடங்கியது. தற்போது தண்ணீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியானது முற்றிலும் வறண்டு காய்ந்து போய் உள்ளது.  சுமார்  6303 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், 24 அடி உயரம் கொண்டது. சுமார்  3645 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனதால், அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப் படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

அதுபோல, சோழவரம் ஏரியும் முற்றிலும் வறண்டதால், அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண் ணீர் எடுப்பதும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில்,  பூண்டி ஏரியில் 153 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231) மி.கன அடி) புழல் ஏரியில் 57 மி.கன அடியும் (3,300 மி.கன அடி) தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீர் சென்னை மக்களின் ஒரு வார குடிநீர் தேவையை மட்டுமே சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, தமிழக அரசு கிருஷ்ணா நதி நீரை நம்பியிருந்த நிலையில், தமிழகம் போலவே ஆந்திர மாநிலத்திலும் வறட்சி நிலவுவதால், கண்டலேறு அணை யில் இரு்ந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னைக்கு கிருஷ்ணாநீர் வரத்தும் அடியோடு நின்றுவிட்டது.

தற்போது சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் தலைவிரித்தாடும்  கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு நாள் ஒன்றுக்கு 4500 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஏரிகள் முழுமையாக வறண்டு வருவதால், சென்னையில்  தண்ணீர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை குடிநீர் வாரியமானது, கோடை கால நீர் தேவையை சமாளிக்கும் விதமாத பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய நீராதாரங்களை தேடி சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

மேலும் புறநகர் பகுதிகளில் உள்ள கு விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீர் போன்றவற்றை எடுத்து சென்னைக்கு அனுப்பி குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டைபோல சென்னையை அடுத்துள்ள சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகள், போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,  தற்போது மீஞ்சூர், நெம்மேலியில் இயங்கும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் என 200 மில்லியன் லிட்டர் குடிநீர், பரவனாறு மற்றும் நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியிலிருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீர், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் மூலமாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னையில் தண்ணீர் தேவையை சமாளிக்க குடிநீர் வாரியம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல குறைந்த அளவே தண்ணீர் உள்ள  போரூர் ஏரியில் இருந்து நீர் எடுக்கும் திட்டமும் இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,  சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

அதே வேளையில், செம்பரம்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வும் தெரிவித்துள்ள அதிகாரிகள், அதற்காக அரசு  ரூ. 191 கோடி ஒதுக்கி இருப்பதாகவும், சுமார் 1 மீட்டர் ஆழத்துக்கும், 6,303 ஏக்கர் பரப்பளவுக்கும் தூர்வாரப்படும் என்றும், மேலும் புழல் மற்றும் பூண்டி ஏரிகளும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அதிக அளவிலான தண்ணீர் சேமித்து வைக்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள் வரும் ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும் உறுதி கூறுகின்றனர்.

தற்போது பல இடங்களில் மக்கள் குடங்களுடன் சாலையில் உட்காரத் தொடங்கி உள்ள நிலையில் இன்னும் போகப் போக தண்ணீர் பிரச்சினையை எடப்பாடி அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி….