டில்லி

வேகமாக காரை ஒட்டி ஒருவர் மேல் ஏற்றி கொன்றுவிட்டு தப்பியவர், விபத்து நடந்த இடத்தில்  சிசிடிவி காமிரா இருக்கிறதா என பார்க்க மறுநாள் வந்தபோது அவரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

மனோஜ் யாதவ் என்பவர் பீகாரை சேர்ந்தவர்.  அவர் தற்போது டில்லியில் வசிக்கிறார்.  டில்லியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களில் மனோஜும் ஒருவர்.  சாலை ஓர பழரசக்கடை ஒன்றில் பணிபுரியும் அவர் அதே கடையில் தங்கி வருகிறார்.  அவருக்கு அதே பகுதியில் உள்ள அவரைப் போன்றே நடைபாதையில் வசிக்கும் ரிக்‌ஷா ஓட்டிகள் பலர் நண்பர்கள்.

விபத்தில் மரணமடைந்த மனோஜ் யாதவ்

தனது நண்பர்களுடன் இரவு உணவு உண்பதற்காக நேற்று சாலையைக் கடந்தார் மனோஜ்.  அப்போது கடும் வேகத்துடன் வந்த ஒரு வெள்ளை நிற ஆடி கார் அவர் மேல் மோதியது.  சுமார் 10-15 அடி உயரத்துக்கு மேல் தூக்கி எறியப்பட்ட அவர்,  அங்கிருந்த கிரில் மேல் விழுந்தார்.  கம்பிகள் குத்தியதில்  ரத்த வெள்ளத்தில் அங்கேயே மரணம் அடைந்தார்.  இது அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியது.  அந்த பதிவை ஆராய்ந்த போலிசார் அந்த ஆடி காரை ஓட்டியவர் யார் என விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வேறு ஒரு வாகனத்தில் வந்த ஒருவர் விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி விட்டு அந்த இடத்தை உற்று நோக்கியதை போலீசார் கவனித்தனர்.  அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காமிராவையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்ட அவரை போலிசார் விசாரித்தனர். சிசிடிவி வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இவர்தான் நேற்று விபத்தை உண்டாக்கியவர் என கண்டுபிடித்தனர்.

மேலும் விசாரித்ததில் அவர் பெயர் மல்கோத்ரா என்பதும் அவர் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி அதிபர் எனவும் தெரிய வந்தது.  வேகமாக காரில் வந்த அவர் மனோஜ் மேல் மோதியதும் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.  விபத்து உண்டாக்கிய வாகனத்தை தனது நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்துவிட்டு, வேறொரு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.   இந்த விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி காமிரா இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளவே அங்கு வந்ததாக மல்கோத்ரா போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.  அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.