துபாய்:

வரும் ஜூலை முதல் பறக்கும் கார்கள் துபாயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான வெள்ளோட்டம் தற்போது நடந்து வருகிறது. டிரைவர் இல்லாமல் இந்த கார்கள் இயக்கப்படவுள்ளது. ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வாடகை கார்களை சீனாவை சேர்ந்த ஈகாங் நிறுவனம் இயக்கவுள்ளது.

‘‘கார் நிறுத்தும் அளவிலான இடத்தில் இதை நிறுத்தலாம். மின் சக்தி மூலம் இயக்கபடவுள்ள இதில் ஒரு நபர் பயணம் செய்யக் கூடிய வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈகாங் 184 என்று பெயரிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இது தீர்வாக அமையும்’’ என்று ஈகாங் நிறுவனர் ஹூவாலி க்யூ தெரிவித்துள்ளார்.

‘‘இதில் 100 கிலோ எடை வரை பயணிக்க முடியும். அதாவது ஒரு நபர் மற்றும் சூட்கேஸ் எடுத்துச் செல்லலாம். துபாய் நகரில் முன்கூட்டியே திட்டமிட்ட வழித்தடத்தில் இது பயணிக்கும். தன்னாட்சி வானூர்திகளாக இது இயங்கும். இதன் மூலம் உலகின் ஸ்மார்ட் சிட்டியாக துபாய் மாறும்’’ என்று துபாய் சாலை போக்குவரத்து ஆணைய தலைவர் ஹி மத்தர் அல் தயர் தெரிவித்துள்ளார்.

பயணி உள்ளே ஏறியவுடன் அதில் உள்ள திரையில் வழித்தடத்தை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது. மற்றவற்றை அந்த தன்னாட்சி வானூர்தி பார்த்துக் கொள்ளும். இது ஒரு மணி நேரத்திற்கு 100 கி.மீ. தூரம் பயணிக்கும். விமானங்களை கண்காணிக்க பயன்படும் 4ஜி நெட்வொர்க் மூலம் இது தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வழித்தடம் திட்டமிடப்படும்.

30 நிமிடம் வரை தான் பேட்டரி பேக் அப் இருக்கும். அதனால் பயணிகளை அது வெகுதூரம் கொண்டு தூரம் கொண்டு செல்ல முடியாது. ஆனால் விமான போக்குவரத்து தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதன் பாதுகாப்பு குறித்த கவலை மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த விமான போக்குவரத்து வல்லுனர் கேப்டன் ரோஸ் ஏய்மர் கூறுகையில்,‘‘நமக்கு பிடிக்குதோ இல்லையோ, தானியங்கி பயணிகள் விமானம் என்பது சாத்தியமே. எங்களிடமும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. உரிய நேரத்தில் செயல்படுத்தப்படும். டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களின் அடுத்த கட்டம் தான் இது’’ என்றார்.