வெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, ராஜஸ்தான் மாநில வேளாண் துறை டிரோன்களை முதன்முதலாகப் பயன்படுத்துகிறது.

இந்த டிரோன்கள், மத்திய வேளாண் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன் முதன்முதலாக புதன்கிழமை காலையில், ஜெய்ப்பூரின் சோமு டெஹ்சிலில் உள்ள சமோட் கிராமத்தில் பயன்படுத்தப்பட்டது.

மொத்தம் 10 லிட்டர்கள் ரசாயனத்தை சுமந்து சென்று தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரோன், வெட்டுக்கிளிகளை சிதறி பறக்கச் செய்யும் வகையிலான ஒலி எழுப்பும் அம்சத்தையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டிரோன், டிராக்டர்களால் செல்ல முடியாத கடினமான பகுதிகளில் வெட்டுக்கிளிகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெட்டுக்கிளிகளை விரட்டும் பணியில், மொத்தம் 30 டிரோன்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.