சேலம்: சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

சென்னை சேலம் 8வழி விரைவுச்சாலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்த வழக்கு, காரணமாக, திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை பாதிப்பு தொடர்பாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன்  6  மக்களவை உறுப்பி னர்கள் சந்திப்புக் கூட்டம் இன்று சமூக இடைவெளியுடன்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே உள்ள சென்னை சேலம் இடையே இருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினரான சேலம் எஸ்.ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி கௌதமசிகாமணி, தருமபுரி செந்தில்குமார், கிருஷ்ணகிரி செல்லக்குமார், ஆரணி விஷ்ணுபிரசாத், காஞ்சிபுரம் செல்வம் ஆகியோர் முன்னிலையில்  ஒரு மனதாக தீர்மானமாக நிறைவேற்றது.

தீர்மானத்தில், ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றிப் பயன் பெறலாம். இதனால், குறைந்த செலவே ஆகும். எட்டு வழிச்சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வது விரயச் செலவாகும். எனவே, எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட்டு, விவசாயிகள் நலன் காக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத்தில் எட்டு வழி சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தகூட்டத்தில் பேசிய எம்.பி.க்கள்,  எட்டு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், இந்த  திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர முயற்சிக்கும் அதிமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தனர்.