அப்பாவி முகமூடியை கழற்றி வையுங்கள் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவாஸி தாக்கு

மும்பை:

அப்பாவி முகமூடியை கழற்றிவையுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஏஐஎம்ஐஎம் (அகில இந்தி மஜ்லிஸ் இ இட்டேஹாதுல் முஸ்லீமின்) இயக்கத் தலைவர் அசாதுதீன் ஓவாஸி கேட்டுக் கொண்டுள்ளார்.


மும்பையில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பின் தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தொலைக் காட்சி கேமிரா முன்பு அமர்ந்து கொண்டு இந்தியாவுக்கு நீங்கள் செய்தி சொல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேட்டுக் கொள்கிறோம்.

பதன்கோடு, யூரி என்ற வரிசையில் புல்வாமாவில் தாக்குதல் நடந்துள்ளது. ஒன்றும் தெரியாதது போல் நடிக்காதீர்கள். அப்பாவி என்ற முகமூடியை கழற்றி வையுங்கள்.

ஏப்ரல் 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ராணுவம், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தான் காரணம். இந்த தாக்குதலை இவர்கள் இணைந்து திட்டமிட்டே நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஜெய்ஸ் இ முகமது அமைப்பினர் அறிவித்துள்ளனர். இஸ்லாமை தோற்றுவித்த முகமது நபியின் சீடராக இருப்பவர் யாரையும் கொல்ல மாட்டார்.

நீங்கள் ஜெய்ஸ் இ முகமது அல்ல. ஜெய்ஸ் இ சாத்தான். அந்த அமைப்பின் தலைவர் மஜ்ஸோத் அஜார் மவுலானா அல்ல. நீங்கள் எல்லாம் பேய்கள். லஷ்கர் இ தைபா என்பது லஷ்கர் இ சாத்தான் தான்.
இந்திய முஸ்லிம்களை பற்றி பாகிஸ்தான் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியர்கள் ஒற்றுமையாக வாழ்வது பாகிஸ்தானுக்கு தாங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.