நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதேசமயம், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 88 குறைவு என்பது ஒரு சோகமான கணக்காக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் இறந்தவர்கள் 896 விவசாயிகள்.

மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் சொந்தப் பிராந்தியமான விதர்பாவில்தான், மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக, கடந்த ஏப்ரல் மாத முடிவு வரையிலான காலகட்டத்தில் 344 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

கடுமையான வறட்சியில் சிக்கி வாடும் மரத்வாடா பகுதியில் 269 தற்கொலைகளும், வடக்கு மராட்டியத்தில் 161 தற்கொலைகளும், மேற்கு மராட்டியத்தில் 34 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் கொங்கன் பிராந்தியத்தில் எந்த தற்கொலை நிகழ்வும் பதிவாகவில்லை.

2018-19 ஆண்டு காலகட்டம், மராட்டிய மாநில விவசாயிகளுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக அமைந்தது. ஏனெனில், அம்மாநிலத்தின் 42% தாலுகாக்கள் மோசமான வறட்சியில் சிக்கின. இதனால், மாநிலத்தின் 60% விவசாயிகள் பாதிக்கப்பட்டதுடன், பெரும் நிலப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்களும் கருகிப்போயின.