கொக்கிளை, இலங்கை

டலில் தத்தளித்த யானையை இலங்கை கடற்படையினர் மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.

யானைகள் கடலிலோ அல்லது எந்த நீர்நிலையிலோ நீச்சல் அடித்து யாரும் பார்த்திருக்க முடியாது.  அவைகளால் நீர்நிலைகளில் விழுந்தால், தும்பிக்கையை மேலே தூக்கி மூச்சு விட முடியும்.  அவ்வளவுதான்.

கொக்கிளை வனப்பகுதி பல மிருகங்களின் இருப்பிடமாக திகழ்கிறது.   அந்த வனப்பகுதியின் இடையில் பெரிய நீர்ப்பரப்பு ஒன்றும் உள்ளது.  இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதி அது.  அங்குள்ள முகத்துவாரத்தை கடக்க மிருகங்கள் நீரில் இறங்கி நீச்சல் அடித்துக் கடந்து செல்லும்.  அது போல ஒரு யானை சென்ற போது திடீரென வந்த அலைகளால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.  கிட்டத்தட்ட கடலுக்குள் 10 மைல்கள் தூரம் உள்ளே சென்றுவிட்டது.

நீரில் தத்தளித்த யானையை தூரத்தில் ரோந்து சென்றுக் கொண்டிருந்த கடற்படையினர் கண்டனர்.  அவர்களுக்கு அது யானை என்பது புலப்பட்டாத நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் வந்து பார்த்ததும் யானை எனக் கண்டு அதிர்ந்தனர்.  அந்த யானையால் தன் தலையைத் தூக்கி தும்பிக்கையை மேலே கொண்டு வர முடியாததால் மூச்சு விடத் திணறியது.

கடற்படை அதிகாரிகள் உடனடியாக நீரில் குதித்து, முதலில் அதை கயிற்றினால் கட்டினார்கள்.   பின்பு கப்பலில் அந்த கயிற்றை கட்டி, மெல்ல கரைக்கு இழுத்து வந்தனர்.  ஒருவர் அந்த யானையின் முதுகில் அமர்ந்து யானையை செலுத்தி வந்தார்.  இதற்குள் வனத்துறை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பப்பட்டது.  கரைக்கு வந்து சேர்ந்த யானையை வனத்துறை அதிகாரிகள் பரிசோதித்து, சிறு காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.  யானை நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் காட்டுக்குள் அனுப்பப்பட்டது.

[youtube https://www.youtube.com/watch?v=KBFmN-3d9ug]

”யானையை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்திராவிட்டால், அது பல துயரங்களை அனுபவித்திருக்கலாம்.  நீரில் இருப்பதால் களைப்பு அடைந்து இருக்கலாம்.  அதனால் மேற்கொண்டு தும்பிக்கையை மேலே கொண்டு வந்து மூச்சு விடுவது மிகவும் கடினமாகி இருக்கும்.  மேலும் உப்புத்தண்ணீர் யானையின் தோலுக்கு தீங்கு விளைவித்து இருக்கக்கூடும்.  கடற்படை வீரர்கள் உடனடியாக செயல்பட்டதற்கு நன்றி” என விலங்கியல் ஆர்வலர் ஒருவர் கூறினார்.