குவைத்: புறா முதுகில் வைத்து போதை மாத்திரை கடத்தல்

அல் அரேபியா:

மன்னர் காலத்தில் கடித போக்குவரத்துக்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தற்போதைய நவீன காலத்தில் போதை பொருட்களை கடத்துவதற்கு சமூக விரோதிகள் புறாக்களை பயன்படுத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் போதை பொருட்கள் கடத்தப்பட்டால் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. அதனால் இதுபோன்ற கடத்தலுக்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென்று பயிற்சி அளிக்கப்பட்ட பிரத்யேக புறாக்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் தற்போது ஈராக்கில் இருந்து குவைத்துக்கு புறா ஒன்று பறந்து சென்றது. ஈராக் எல்லையில் உள்ள அப்தாலி மகாகண பகுதியில் உள்ள அரேபியா சுங்கத்துறை கட்டடம் அருகே இந்த புறா உட்கார்ந்திருந்தது. அதிகாரிகள் சந்தேகமடைந்து அந்த புறாவை பிடித்து சோதனையிட்டனர்.

புறாவின் முதுகு பகுதியில் அதன் நிறத்திற்கு ஏற்ப கிரே கலரில் சிறிய பை இணைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் 178 போதை மாத்திரைகள் வைத்து இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புறா முதுகு பகுதியல் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.