சென்னை:

சென்னையில் போதை மாணவர் ஓட்டிய கார் மோதி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

சென்னை கத்தீட்ரல் சாலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே பார்கிங் ஏரியாவில் 20 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 2 மணியளவில் அசுர வேகத்தில் தாறுமாறாக வந்த கார் ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது.

இதில் ஒரு ஆட்டோவின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அரக்கோணத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (வயது 33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 டிரைவர்கள் காயமடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கார் ஓட்டி வந்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் நவீத் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காரில் கிரண்குமார் (வயது 19), விஷால் ராஜ்குமார் (வயது 19), ஹரி கிருஷ்ணன் (வயது 21), வினோத் (வயது 20) ஆகியோரும் இருந்துள்ளனர். விடிய விடிய நடந்த மதுபான பார்ட்டியில் அவர்கள் கலந்துகொண்டு திரும்பியது தெரியவந்தது. 5 மாணவர்கள் மீது அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஆறுமுகம் (வயது 29) என்ற ஆட்டோ டிரைவர் ஆர்.கே சாலையில் மாணவர் விகாஷ் ஆனந்த் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி இறந்தார். தற்போதும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதி சாலையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.