டில்லி:

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில்  விரைவில் சட்டம் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான சட்ட திருத்த மசோதா சில நாட்களில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.10ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் விவிஐபிக்கள் செல்லும் வாகனங்களை  தடுப்பதற்கும் ரூ.10,000 அபராதம் விதிக்க  வகை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புதிய சட்டத்திருத்தங் களுடன் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா  ஓரிரு நாட்களில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியா விட்டால் ரூ.1000 அபராதமும் (தற்போது ரூ.100), ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 (தற்போது ரூ.100) என்றும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாதவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (தற்போது ரூ.500) என்றும், குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக (ரேஸ்) வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் (தற்போது ரூ.500) ஆகவும், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு  அதிக பட்சமாக ரூ.20 ஆயிரம் என்றும் மேலும் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதமும் வசூலிக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாலை விதிகளை மீறினால் ரூ.500 ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 ம், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000 ம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 ம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 ம் அபராதமாக விதிக்கப்படும்.

விபத்து தொடர்பான காப்பீட்டுத் தொகைகள் திருத்தப்பட்டு, விபத்தில் பலியானோருக்கு பத்து லட்சம் வரை இழப்பீடும், விபத்தில் காயமடைவோருக்கு ஐந்து லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.