குடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த  பரிதாபம்…

குடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த  பரிதாபம்…

ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ’ஒரு அவுன்ஸ்’ குடித்தாலேயே, குடிமகன்களுக்குக் கண்ணைக்கட்டுகிறது.

இதனால் விபத்துகள், கொலைகள், மோதல்கள் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே சகஜமாகி விட்டன.

கர்நாடக மாநிலத்தில் ஒரு குடிமகன் நிகழ்த்திய சம்பவம், அந்த மாநிலத்தில் ’விஷம் ‘போல், வேகமாகப் பரவி வருகிறது.

கோலார் மாவட்டத்தில் உள்ள முஸ்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற இளைஞர் நேற்று பகலில் வயிறு முட்டக் குடித்து விட்டு, தனது ’பைக்’கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 வழியில் அவரது பைக்கின் சக்கரத்தில் பாம்பு ஒன்று சிக்கி, குமாரைத் தடுமாற செய்துள்ளது.

ஆத்திரம் அடைந்த குமார், அந்த பாம்பைப் பிடித்து தனது கழுத்தில் மாலை போல் போட்டுக்கொண்டு, ஊர் திரும்பினார்.

கழுத்தில் பாம்புடன், குமார் வருவதைப் பார்த்த உறவினர்கள் மிரண்டு போனார்கள்.

அதன் பிறகு நடந்த காரியம் குரூரத்தின் உச்சம்.

அந்த பாம்பின் தலை முதல் பாதம் வரை துண்டு துண்டாகக் கடித்துத் துப்பியுள்ளார், குமார்.

இறந்த பின்னும் பாம்பின் சதை துண்டுகளை மீண்டும் எடுத்து –பீஸ் பீஸாக்கிய பின்னரே அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

இந்த கோரத்தை ஊர் இளைஞர்கள் தங்கள் செல்போனில் படம் பிடிக்க ஆர்வம் காட்டினார்களே தவிர, இளைஞரிடம் இருந்து பாம்பைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

‘’ அந்த பாம்பு அடிக்கடி நான் போகும் பாதையிலேயே வந்து சீறியது. இன்றும் அதுபோல் நடந்ததால் கடித்து கொன்றேன்’’ என்று போலீசாரிடம் கூலாக சொல்லியுள்ளார், குமார்.

– ஏழுமலை வெங்கடேசன்