ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை இளைஞர் கைது

--

சென்னை

மிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தினமும் சென்னை செண்டிரலில் இருந்து டில்லிக்கு செல்கிறது. நேற்று இரவு கிளம்பிய இந்த ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு ஒரு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். அதை ஒட்டி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை விஜயவாடா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் எதுவும் சிக்காததை ஒட்டி ரெயில் கிளம்பிச் சென்றது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. அந்த தேடுதலில் மிரட்டல் விடுத்த இளைஞர் சிக்கி உள்ளார். அவர் பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் இருப்பது கண்டு பிடிக்கபட்டது.

அவரை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர் மதுபோதையில் இருந்ததால் அவ்வாறு மிரட்டியதையும் தெரிவித்துள்ளார்.