குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது மனைவி ஷோபனா. மகள் சாந்தலா, ஆனைக்கட்டியில் உள்ள ஓர் தனியார்ப் பள்ளியில் படித்து வருகிறார்.

2019 ஜூன் 24-ம் தேதி ஷோபனா தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு ஜம்புகண்டி அருகே வரும்போது, எதிரில் அசுரவேகத்தில் முழு போதையில் பாலாஜி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார்.  மகள் சாந்தலா பலத்த காயமடைந்தார்.   தனது மனைவியின் உயிருக்கு நீதி கேட்டு, அவரது சடலத்துடன் விபத்து நடந்த இடத்திலேயே அமர்ந்து போராடினார் ரமேஷ்.

அதிகாரிகள் உடனடியாக வந்து தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ரமேஷ் கலைந்து சென்றார்.  ஆனால் இது நடந்து ஓராண்டு ஆகியும்,  ஜம்புகண்டி பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசாங்கம்.

இது பற்றி மருத்துவர் ரமேஷ் கூறுகையில், “ஷோபனா 1997-ம் ஆண்டிலிருந்து என்னிடம் செவிலியரா வேலை செய்து வந்தார்.  2003-ம் ஆண்டு அவரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது.  எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் போகாத இடமே இல்லை.  என் மனைவி கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் இயற்கையை மிகவும் நேசிப்பார்” என்று நினைவு கூறுகிறார்.

மருத்துவர் ரமேஷ் நோயாளிகளிடம் அவர்கள் விருப்பப்பட்டுத் தரும் பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்வார்.  பொதுச்சேவையைப் பெரிதும் விரும்பும் இவர் நடந்த கொடூர விபத்துக்கு டாஸ்மாக் தான் முக்கிய காரணம் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்.

“உண்மையைச் சொல்லணும்னா, அந்த இளைஞர் பாலாஜி மீது எனக்கு துளி கூட கோபமோ, வருத்தமோ இல்லை. டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து விற்பது அரசாங்கம் தானே? இந்த அரசாங்கம் தான் மக்களுக்கு தாய், தந்தை எல்லாம். வருமானம் வேண்டுமென்பதற்காக கண்ணை விற்று சித்திரம் வரைவது நியாயமில்லை. அந்த விபத்துக்குப் பிறகு ஜம்புகண்டி டாஸ்மாக் கடையை மூடினார்கள். ஆனால், அருகே உள்ள மாங்கரையில் டாஸ்மாக் கடை திறந்துவிட்டனர். இந்தக் கொரோனா காலகட்டத்தில் கூட இளைஞர்கள் குடித்துவிட்டு நிலைதடுமாறிச் செல்வதை என்னால் பார்க்க முடிகிறது.

 அதை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. இங்கு மாற வேண்டியது இந்தக் கலாச்சாரம்தான். இந்தக் கலாச்சாரம் அந்த தேனைப் போல இருக்க வேண்டுமென நினைக்கிறேன். என் மனைவியின் நினைவு நாளில், அவரது நினைவிடம் மற்றும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று, இந்தக் கலாச்சாரம் மாற வேண்டுமென அவரிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம்” என்று வருத்தத்துடன் முடித்தார்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸால் பாதிப்பு ஒருபுறம் என்றால், அரசாங்கம் நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளாலும், அதனால் ஏற்படும் குடிபோதையாலும் இன்னும் இழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வைரஸ் பாதிப்புக்கு இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிடலாம். ஆனால், குடியால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இழப்புகளுக்கும் தமிழக அரசு மட்டுமே முழுப் பொறுப்பு

– லெட்சுமி பிரியா