பிகில் படம்! 120 கி.மீ. வேகம்! குடிபோதையில் பைக்கில் பறந்த ரசிகர்! பலியான குழந்தை

திருவள்ளூர்: பிகில் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியில், குடிபோதையில் பைக்கில் 120 கி.மீ சென்ற ரசிகர் குழந்தை மீது மோதியதில், அந்த குழந்தை பலியானது.

விஜய் ரசிகர்களின் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிகில் படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை வெற்றிக்கரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந் நிலையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற வெறியில் குடிபோதையில் அசுர வேகத்தில் சென்ற விஜய் ரசிகர் குழந்தை ஒன்றின் மீது மோதியுள்ளார். அதில் அந்த குழந்தை உயிரிழந்திருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ். நடிகர் விஜய்யின் அதி தீவிர ரசிகர். அவரது படம் எப்போது வந்தாலும் முதல் நாளே பார்த்து புளங்காகிதம் அடைந்து விடுவார்.

வழக்கம் போல, பிகில் படத்தை பார்க்க பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். 120 கி.மீ வேகத்தில் அவர் பைக்கை செலுத்தியதாக கூறப்படுகிறது. அப்படி வேகமாக பைக் ஓட்டிய இன்பராஜ் , 2 வயது குழந்தையின் மீது மோதி இருக்கிறார். விபத்தில், குழந்தை உயிரிழந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், இன்பராஜை கைது செய்தனர். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஒரு படத்தை பார்க்க இப்படி சென்று விபத்தை ஏற்படுத்தி, ஒரு குழந்தையின் உயிரை பறித்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சினிமா மோகத்தை இளைஞர்கள் விட்டொழிக்க வேண்டும் என்று பலரும் கூறி இருக்கின்றனர்.

 

கார்ட்டூன் கேலரி