சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கைதிகளில், 225 பேர், கை, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற காரணம் குறித்து, அவர்களை கைது செய்த, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், விசாரணை நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளில் பெரும்பாலானவர்களுக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைகளில் அடைக்கின்றனர். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க முற்படும்போது, சிலர் தப்பிக்க முற்படுவர். அப்போது கீழே விழுந்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவது வாடிக்கை. சில சமயம் காவலர்களே குற்றங்களை தடுப்பதற்காக, குற்றவாளிகளின் கை, கால்களை முறிப்பதாக கூட குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து அறிக்கை அளிக்கும் படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இதுநாள் வரை கைதிகளாக சிறைக்கு வருகை தந்துள்ளவர்களில் கை மற்றும் கால்கள் முறிந்து சிகிச்சை பெற்றவர்கள், சிறையில் உள்ளவர்கள் என மொத்தம் 225 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் டி.எஸ்.பிக்கள் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகளை துண்புருத்தியதாக கூறப்படும் குற்றம்சாட்டக்கள் குறித்தும் கைதிகளிடம் விளக்கம் பெறப்பட்டு வருகிறது.

கைதிகளிடம் பெறப்படும் விளக்கங்களை விசாரணை அறிக்கைகளை டி.எஸ்.பிக்கள் தரப்பில் மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்பிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.