ஏர் இந்தியா விமானத்தின் துபாய் சேவை தடை ரத்து! வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிப்பு

கொரோனா காரணமாக, அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும்  15 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக துபாய் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்,  தற்போது,அந்த தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, துபாயில் இருந்து விமான சேவை வழக்கம் போல் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 15 ஆம் தேதியில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியது. அதையடுத்து,  இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொண்ட பின்னர்தான் அழைத்து வர வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் பயணிகள் சென்றனர். இதில் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குதவற்கு 15 நாட்கள் தடை விதித்து துபாய் நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  தற்போது தடை  உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.