கொழும்பு

மும்பை 26/11 தாக்குதலில் தப்பிய துபாய் வாழ் இந்தியர் தற்போது இலங்கை குண்டு வெடிப்பில் இருந்தும் தப்பி உள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மரணம அடைந்தனர்.   தேவாலயங்களிலும், ஓட்டல்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர் மரணமடைந்துள்ளனர்.    இலங்கையில் கடந்த 10 வருடங்களாக எவ்வித அசம்பாவிதமும் இல்லாத நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் துபாய் வாழ் இந்தியரான அபினவ் சாரி மற்றும் அவர் மனைவி நவ்ரூப் சாரி ஆகியோர் தப்பி உள்ளனர்.    அவர்கள் இருவரும் குண்டு வெடிப்பு நடந்த சின்னமன் கிராண்ட் ஓட்டலில் தங்கி இருந்தனர்.  அந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயம் இருவரும் வெளியே சென்றதால் தப்பி உள்ளனர்.  இந்த தகவலை அபினவ் சாரி கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அபினவ் சாரி, “நானும் எனது மனைவி நவ்ரூப் ஆகிய இருவரும் துபாயில் சிறு வயதில் இருந்தே வசித்து வருகிறோம்.  நான் இரு முறை அமீரகத்தை விட்டு வெளியே சென்றுள்ளேன்.   இரு முறையும் நான் சென்ற இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.    எனது முதல் பயணமாக நான் 2008 ஆம் வருடம் மும்பை சென்றேன்.     அப்போது நான் தங்கி இருந்த பகுதியில் நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பினேன்.

தற்போது நானும் என் மனைவியும் இலங்கைக்கு சென்றிருந்தோம்.   நாங்கள் இருவரும் ஈஸ்டரை முன்னிட்டு ஒரு தேவாலயம் சென்று பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தோம்.  பிரார்த்தனைக்கு இடையில் பாதிரியார் அங்கிருந்த அனைவரையும் உடனடியாக தேவாலயத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.   நாங்கள் என்ன நடந்தது என தெரியாமல் அங்கிருந்து வெளியேறினோம்.

இருவரும் காலை உணவு சாப்பிடலாம் எம தீர்மானித்தோம்.   சாலை பரபரப்பாக இருந்ததால் நாங்கள் தங்கி இருந்த சின்னமன் கிராண்ட் ஓட்டலுக்கு திரும்பினோம்.  அங்கு அனைவரும் வெளியே உள்ள புல்தரையில் இருந்தனர்.   நாங்கள் அது ஒரு பாதுகாப்பு ஒத்திகை என நினைத்தோம்.  அதன்  பிறகு நாங்கள் குண்டு வெடிப்பு பற்றி தெரிந்துக் கொண்டோம்.  என் க்ண் முன்னே நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.   ஒரு திரைப்படம் போல இருந்தது.” என தெரிவித்துள்ளார்.